டிரம்ப் நிர்வாகம் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை.. பிட்காயின் மதிப்பு 90 ஆயிரம் டாலரை நெருங்கியது

வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெறத் தொடங்கியதில் இருந்தே உலகின் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயினின் மதிப்பு உயரத் தொடங்கியது.

டிரம்பின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானதும் அதன் தாக்கம் கிரிப்டோகரன்சியில் எதிரொலித்தது. கமலா ஹாரிசுடன் ஒப்பிடும்போது கிரிப்டோகரன்சிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொள்வார் என்ற நம்பிக்கை எழுந்தது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் டிரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் மீதும், கிரிப்டோ கரன்சி மீதும் திரும்பியது. பிட்காயின் யூக வணிகர்கள் மிகவும் உறுதியாக பந்தயம் கட்டத் தொடங்கினர்.

இதனால் தேர்தல் முடிவுகள் வெளியானபோது எப்போதும் இல்லாத அளவிற்கு பிட்காயின் மதிப்பு 75,000 டாலர்கள் என்ற நிலையை அடைந்தது.

தேர்தலில் டிரம்பின் வெற்றி அறிவிக்கப்பட்டதையடுத்து, கிரிப்டோ சந்தைகளுக்கு சாதகமான சூழல் அமைந்தது. இதனால் தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்ற பிட்காயின் மதிப்பு, இன்று 89,637 டாலர்கள் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

இதற்கு முன்பு டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது பிட்காயினை ‘மோசடி’ என்று அழைத்தார். அந்த கரன்சி ‘டாலருக்கு எதிராக போட்டி’ என்றும் புகார் கூறினார். இந்த முறை தனது பிரச்சாரத்தின்போது, முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட டிரம்ப், தன்னை ஒரு கிரிப்டோ சாம்பியனாக காட்டிக்கொண்டார்.

அமெரிக்காவை கிரிப்டோ தலைநகராக மாற்றப்போவதாகவும், செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் தலைவரான கேரி ஜென்ஸ்லரை மாற்றுவதாகவும் டிரம்ப் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தார். மேலும் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து, வேர்ல்ட் லிபர்ட்டி பைனான்சியல் என்ற டிஜிட்டல் கரன்சி தளத்தை தொடங்கப்போவதாகவும் அறிவித்தார் .

கிரிப்டோகரன்சி அல்லது கிரிப்டோ என்பது கிரிப்டோகிராபி மூலம் பாதுகாக்கப்பட்ட டிஜிட்டல் அல்லது மெய்நிகர் கரன்சியாகும். இது பெரும்பாலும் ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் அதன் டெவலப்பர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. யாருடைய கட்டுப்பாட்டிலும் இயங்காத இந்த பரிவர்த்தனையை ஏற்க எல்லா நாடுகளுமே தயக்கம் காட்டுகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.