சீனாவில் நேற்றுமுன்தினம் விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த மக்கள் மீது கார் மோதியதில் 35 பேர் உயிரிழந்தனர். 43 பேர் படுகாயமடைந்தனர்.
சீனாவில் ஜூஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் மக்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றது. திங்கள் கிழமை இரவு 7 மணி போல் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்தக் காரை ஓட்டி வந்த 62 வயதுமிக்க நபரை காவல்துறை கைது செய்துள்ளது. இது விபத்தா அல்லது திட்டமிட்ட தாக்குதலா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கக் கோரியும் இதற்குக் காரணமான நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த விளையாடு மையம் மூடப்பட்டுள்ளது. ஜூஹாயில் சீனாவின் மிகப் பெரிய வருடாந்திர விமான சாகச நிகழ்ச்சி நேற்று தொடங்க இருந்த நிலையில், அங்கு இந்தச் சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த தகவல்களை ஊடகங்கள் வெளியிடுவதை சீனா அரசு கட்டுப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.