ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேர வைக்கு முதல் கட்டமாக இன்று 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் அடங்கிய இண்டியா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜேஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். இந்த சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது.
இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த 43 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து 43 தொகுதிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் அதிகாரிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.
43 தொகுதிகளில் மொத்தம் 685 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார், ராணுவ வீரர்கள், துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். நவம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜார்க்கண்டில் மொத்தம் 2.6 கோடி வேட்பாளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1.31 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 1.29 கோடி பேர். 11.84 லட்சம் வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
வாக்குப்பதிவுக்காக 15,344 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுஉள்ளன. இவற்றில் 12,716 வாக்குச்சாவடிகள் கிராமப்பகுதியிலும், 2,628 வாக்குச்சாவடிகள் நகரப் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன. 1,152 வாக்குச்சாவடிகளை முழுமையாக பெண்களே நிர்வகிப்பர் என்று மாநில தேர்தல் அதிகாரி கே.ரவிக்குமார் அறிவித்துள்ளார்.
செராய்கெல்லா தொகுதியில், ஜேஎம்எம் கட்சியிலிருந்து பாஜகவுக்குத் தாவிய மூத்த தலைவர் சம்பாயி சோரன் போட்டியிடுகிறார். இண்டியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வயநாடு இடைத்தேர்தல்: கடந்த மக்களவைத் தேர்தலில் ரே பரேலி, வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் ரே பரேலி தொகுதியில் எம்.பி.யாக தொடர்கிறார்.
இதையடுத்து இங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா போட்டியிடுவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இங்கு காங்கிரஸ் சார்பில் பிரியங்காவும், கேரளாவை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) சார்பில் சத்யன் மோக்கேரியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர். கர்நாடகாவில் ஷிக்காவோன், சண்டூர், சென்னப்பட்டணா ஆகிய 3 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. சென்னப்பட்டணாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார்.