கர்நாடகாவில் வேலை வாய்ப்பில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் இல்லை என அம்மாநில முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் ஒப்பந்தங்கள் ஒதுக்கீடு செய்வதில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த நடவடிக்கையை விமர்சித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “காங்கிரஸ் அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக மத ரீதியாக இடஒதுக்கீடு வழங்க திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவிலும், மகாராஷ்டிராவிலும் முஸ்லீம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. பாஜக இருக்கும் வரை சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது” என சாடினார்.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா நேற்று விடுத்த அறிக்கையில், ”கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது முற்றிலும் பொய். அது தொடர்பான கோரிக்கை இருந்த போதும், இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உண்மை இவ்வாறு இருக்க, சிலர் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக மத ரீதியான அரசியலை முன்னெடுப்பது சரியல்ல”என தெரிவித்துள்ளார்.