சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் நீரிழிவு நோய்க்கு மேம்பட்ட சிகிச்சை அளிக்கவும், முதியவர்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘ஹெல்தி ஏஜிங் கிளினிக் மற்றும் மோகன்ஸ் ஆன் வீல்ஸ்’ ஆகிய இரண்டு திட்டங்களை தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் தலைவர் மருத்துவர் வி.மோகன், நிர்வாக இயக்குநர் ம்ருத்துவர் ஆர்.எம்.அஞ்சனா, ஆலோசகர் மருத்துவர் எஸ்.உத்ரா ஆகியோர் கூறியதாவது: ஆண்டுதோறும் உலக நீரிழிவு தினம் நவம்பர் 14-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி, மருத்துவமனைக்கு வர முடியாத நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு தேடி சென்று சிறப்பாகன சிகிச்சை அளிக்க டாக்டர் மோகன்ஸ் ஆன் வீல்ஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், மனிதர்கள் உயிர்வாழ்வது சராசரியாக 80 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. அதேநேரம், சர்க்கரை நோய் போன்றவற்றால், 55 வயதிலேயே ‘டிமான்ஷியா’ என்ற மறதி நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயால் மூளையின் செயற்பாடு படிப்படியாக பாதிக்கப்பட்டு, நினைவாற்றல், சிந்திக்கும் திறன், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன், உடலின் செயல்பாடு ஆகியவை பாதிப்படைய செய்கிறது. அதேபோல், உடல் பலவீனத்தால் நடப்பதில், அமருவதில் சிரமம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.
இதுபோன்ற அவதியுடன், மீதமுள்ள நாட்களில் வாழ்வதை தவிர்க்கும் வகையில், உலகளவில் முதன் முறையாக, நீரிழிவு மருத்துவமனையில், ஹெல்தி ஏஜிங் கிளினிக், மோகன்ஸ் ஆன் வீல்ஸ் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. காலை 8 முதல் இரவு 8 மணி வரை இத்திட்டங்கள் செயல்படும். சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டங்கள் குறித்து மக்களிடையே பெறும் வரவேற்பை தொடர்ந்து, நாடுமுழுதும் விரிவுப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.