`கருவறைக்குள் நுழையத் தகுதி உண்டா என ஒதுக்கினார்கள், ஆனால்…' – முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 115 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 115 மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று சான்றிதழ்களை வழங்கினார்.

86 ஆண்கள், 11 பெண்கள் என 97 பேர் அர்ச்சகர்கள் பயிற்சியும், 9 பேர் ஓதுவார் பயிற்சியும், 9 பேர் தவில், நாதஸ்வரம் பயிற்சி பெற்று சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோயில் இருக்கும் தெருவுக்குள் நுழையாதே என்றார்கள். நுழைந்தோம்! கோயிலுக்குள் நுழையாதே எனத் தடுத்தார்கள். நுழைந்தோம்! கருவறைக்குள் நுழையத் தகுதி உண்டா என ஒதுக்கினார்கள். நுழைவோம் என்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றினோம்! அத்தனை தடைகளையும் உடைப்போம்; சமத்துவத்தை நிலைநாட்டுவோம்!” என்று பதிவிட்டுள்ளார்.

1970 ஆம் ஆண்டு அனைவரும் கோயில் கருவறைக்குள் செல்லும் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார். அப்போது அண்ணாவின் மறைவிற்குப் பிறகு முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி, “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் விரைவில் இயற்றப்படும். எனவே போராட்டம் வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, பெரியார் போராட்டத்தைக் கைவிட்டார். உடனே அனைவரும் அர்ச்சகராகும் வகையில் இந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தின் பிரிவுகளில் திருத்தம் செய்து, சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் பல்வேறு சிக்கல்களால் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. 1973 ம் ஆண்டு தந்தை பெரியாரும் காலமாகிவிட்டார். இந்தச் சட்டத்தை நிறைவேற்றி அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கும் கனவு பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாகவே இருந்தது.

2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சியில் அமர்ந்த கலைஞர் கருணாநிதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக அரசாணை பிறப்பித்து, அதற்கான சட்டத்தையும் இயற்றினார். தமிழ்நாட்டில் 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்பட்டு 240 பேருக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. ஆனாலும், பல்வேறு வழக்குகள் காரணமாக பணி நியமனம் செய்யப்படாமல் இருந்தது.

பெரியார்

கலைஞரின் மறைவிற்குப் பிறகு, 2021 ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடனே, ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். பெண் அர்ச்சகர் உட்பட அந்த 58 பேரும் கோயில்களில் அர்ச்சகர் பணியைச் செய்யத் தொடங்கியது வரலாற்று நிகழ்வாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 115 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.