`கஸ்தூரிக்கு இது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியாதா?' – நீதிமன்றம் காட்டம்!

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரியை பா.ஜ.க உள்ளிட்ட அவர் ஆதரவளித்த அமைப்புகளும் கைவிட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவின்மீது வருகின்ற 14-ஆம் தேதி உத்தரவிடுவதாக, நீதிபதி ஒத்திவைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை

சென்னையில் இந்து மக்கள் கட்சி ஏற்பாடு செய்த பிராமணர் சமூக பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க ஆதரவாளரும், நடிகையுமான கஸ்தூரி, தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்களை இழிவுபடுத்தி பேசியதாக புகார் எழுந்தது. சமூக ஊடகங்களில் அவர் பேசிய வீடியோ வைரலானதால் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து பா.ஜ.க நிர்வாகிகள் உட்பட தெலுங்கு சமூக அமைப்பினர் கஸ்தூரிக்கு கண்டனம் செய்தனர். இந்நிலையில், தான் தெலுங்கு பேசும் மக்களை அப்படி பேசவில்லை என்றும், தான் பேசியதை சிலர் திரித்துவிட்டார்கள் என்றும் மறுப்பு தெரிவித்த கஸ்தூரி, தான் பேசியது தவறாக இருந்தால் மன்னித்து விடும்படியும், பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், சமாதானமாகாத தெலுங்கு அமைப்புகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கு அமைப்புகள் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கஸ்தூரிக்கு எதிராக போலீஸில் புகார் அளித்தன. அதில் சென்னை, திருச்சி, மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில் மதுரை திருநகர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, கஸ்தூரியை தேடி வருகின்றனர். சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சம்மன் வழங்க போலீஸ் சென்றபோது போயஸ் கார்டன் பகுதியிலுள்ள் கஸ்தூரியின் வீடு பூட்டியிருந்ததால் திரும்பி வன்தனர். அவருடைய மொபைலும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மொபைல் சிக்னல் அவர் ஆந்திராவில் இருப்பதை காட்டுவதாக சொல்லப்பட்டது.

கஸ்தூரி

போலீஸ் தன்னைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில்தான், மதுரை திருநகர் போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 11-ஆம் தேதி கஸ்தூரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “சென்னை கூட்டத்தில் பேசும்போது, 300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த தெலுங்கு பேசும் மக்களை தமிழர் என்று அடையாளப்படுத்தும்போது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த பிராமணர்களை ஏன் தமிழர் என்று அடையாளப்படுத்துவதில்லை என்று கேக்வி எழுப்பினேன். தி.க, தி.மு.க -வின் முதுகெலும்பாக இருக்கும் தெலுங்கு பேசுவோர் பற்றித்தான் அப்படி குறிப்பிட்டேன். ஆனால், அனைத்து தெலுங்கு மக்களையும் நான் அவதூறாகப் பேசியதாக பரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தின் மூலம் வருத்தம் தெரிவித்தேன்.

இந்நிலையில் சென்னை கூட்டத்தில் பேசியதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அகில இந்திய தெலுங்கு கட்டமைப்பு தலைவர் சி.எம்.கே ரெட்டி மிரட்டியதோடு குறிப்பிட்ட சில நபர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் வற்புறுத்தினார். அதற்கு நான் ஒத்துக்கொள்ளவிலலை. அதைத் தொடர்ந்து ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களின் தூண்டுதலில் என் பேச்சை திரித்து தமிழ்நாடு முழுவதும் எனக்கு எதிராக புகார் அளிக்க செய்துள்ளனர். இது சட்டவிரோதம். முதல் தகவல் அறிக்கையில் உள்ளபடி நான் எந்த குற்றமும் புரியவில்லை, கருத்துரிமையை மறுக்கும் மாநில அரசின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியது. என் பேச்சால் எந்த கலவரமும், இரு சமூகங்களுக்கு இடையே மோதலும் நடைபெறவில்லை. நான் சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகள். இந்த வழக்கில் கைது செய்யப்படுவேன் என அஞ்சுகிறேன். எந்த நிபந்தனையையும் ஏற்க தயாராக இருக்கும் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, முன் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், “நடிகை கஸ்தூரி திட்டமிட்டு இப்படி பேசியுள்ளார். குறிப்பிட்ட சமூகத்தின் மாண்பை குறைக்கும் வகையில் பேசியுள்ளார். எளிதாக வருத்தம் தெரிவித்து விட்டால் அவர்களின் மன வருத்தம் சரியாகி விடாது. அதனால் முன் ஜாமீன் தரக் கூடாது. பிறருக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும்” என்று வாதிட்டார்.

கஸ்தூரி

அப்போது நீதிபதி, “கஸ்தூரி எதற்கு குறிப்பிட்ட சமூக பெண்களையும் ராஜாக்களின் அந்தப்புரத்தையும் இணைத்து பேசினார்?” என்று கேள்வி எழுப்பியவர், “மெட்ராஸ் மாகாணம் இருந்த காலத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்கள் தமிழ்நாட்டில் வசித்து வருகிறார்கள். அவர்கள் வெளியிலிருந்து வரவில்லை. ஆனால், இன்று சிலர் சமூகத்தை பிளவுபடுத்த நினைக்கிறார்கள். படித்தவர், சமூக ஆர்வலர் என்று சொல்லிக்கொள்ளும் மனுதாரர் இது போன்ற கருத்துகளை எப்படி தெரிவிக்கலாம்?. தான் பேசிய வீடியோவை பார்க்கும்போது இது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கஸ்தூரிக்கு தெரியாதா?” என்று கடுமையான கருத்துகளை வெளிப்படுத்தியவர், முன் ஜாமீன் மனு மீதான உத்தரவை வருகின்ற 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.