தேர்தல் பிரச்சார அமைதிக் காலப்பகுதியில் சமூக ஊடகங்களில் மற்றும் குறுஞ் செய்தி சேவை (SMS) ஊடாக தேர்தல் பிரச்சார செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாது என்றும் அது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே ஆணைக்குழுவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.
தேர்தல் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாட்டுக் கண்காணிப்பு மத்திய நிலையத்தில் சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் கண்காணிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட தலைவர், தொலைத்தொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவுடன் குறுஞ்செய்தி தொடர்பாகக் கலந்துரையாடியதாகவும், அதற்காக விசேட நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தினார்.
இந்தச் செயற்பாடுகளை நேரடியாகக் கட்டுப்படுத்துவது கடினம் எனக் குறிப்பிட்ட தலைவர், சமூக ஊடகங்களை ஏதோ ஒரு மட்டத்தில் கட்டுப்படுத்த முடியும் என்றும், சில சமூக ஊடகங்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.