Kanguva: "5 குலங்களின் கதை; புதிய தமிழ்ச் சொற்கள்; 2 வருட உழைப்பு" – வசனகர்த்தா மதன் கார்க்கி பேட்டி

மொழி எப்பொழுதும் நம்மை யார் என்பதை அடையாளப்படுத்தும். அது போன்று தமிழ் நம் அனைவரையும் வாழ வைக்கும். தமிழ் மொழியை உலகிற்குக் கொண்டு சேர்க்கும் பொறுப்பில் நேற்றும் இன்றும் அதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. தமிழின் சிறப்புகளைப் பல பேர் எடுத்துக் கூறி வருகின்றனர். அந்த வரிசையில் மிக முக்கிய பங்கு வகிப்பவர், பாடலாசிரியர், எழுத்தாளர் மதன் கார்க்கி. கங்குவா படத்தில் வசனக்கர்தாவாகப் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

எழுத்தாளர் மதன் கார்க்கி

உங்களின் தற்போதைய எழுத்துப் பயணத்தைப் பற்றி சொல்லுங்கள்?

தமிழில் பழைய இலக்கிய சொற்களிலிருந்து வட்டார வழக்குச் சொற்கள், நவீனத்திற்கு ஏற்ப அறிவியல், மருத்துவம், பொறியியல் போன்று நாம் நகரும் அடுத்தடுத்த கட்டங்களுக்கான புதிய புதிய கலைச் சொற்களை உருவாக்கும் பணியைச் செய்து வருகிறேன். அந்த சொற்களை எல்லாம் ஓரிடத்தில் சேர்க்க வேண்டும் என்பதற்காக எங்களின் பவுண்டேஷன் வேலை செய்கிறது. இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, எப்படி நாங்கள் புதிதாகச் சொற்களை உருவாக்குகிறோம், அவற்றை அரசிடம் அனுமதி பெற்று மக்களிடம் எவ்வாறு கொண்டு செல்லப் போகிறோம் போன்றவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இதை ஆச்சரியமாக சூர்யா கேட்டுக் கொண்டிருந்தார்.

கங்குவா படத்தில் காட்சிகளாகப் பார்க்கும் பொழுது மிகவும் பிரமாண்டமாகத் தோன்றுகிறது. இந்தப் படத்தில் நீங்கள் மிகவும் சவாலாக நினைத்த பகுதிகள் என்னென்ன?

இந்த படத்தில் சவாலான பகுதிகள் நிறையவே இருந்தன. புஷ்பா படத்திற்கான டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான், சிவா ஸ்டூடியோவிற்கு வந்தார். சிவாவிடம் பேசிய பொழுது இரண்டு கதைகளைச் சுருக்கமாகக் கூறினார். கங்குவாவிற்கான கதையைக் கூறும் பொழுது, அப்படி ஒரு காட்சிகள் கற்பனையாக நினைவிற்கு வந்தது. இரண்டு கதைகளையும் படமாகச் செய்யலாம். ஆனால் கங்குவாவிற்கான கதை கண்டிப்பாகச் செய்ய வேண்டும். ஆனால், எப்படிச் செய்யப் போகிறோம் என்பதுதான் தெரியவில்லை. ஏனெனில், அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது அந்த புதிய உலகம். சிவா கூறியது, “வழக்கமா நான் டயலாக் ரைட்டர்ஸ் ஓட வொர்க் பண்ணதில்லை. ஆனால் இந்த படத்தில் நாம் இருவரும் சேர்ந்து செய்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது” என்று கூறினார். நானும் சரியென்று ஒப்புக்கொண்டேன். அந்த நேரத்தில் புரொடக்ஷன் கூட முடிவாகவில்லை என்றாலும் படத்திற்கான வேலையைத் தொடங்கி விட்டோம். மீண்டும் சிவா அந்த படத்தின் முழு கதையையும் எனக்குக் கூறினார்.

கங்குவா

இந்த படத்தில் சிவா ஐந்து குலங்களுக்கு நடுவில் நடக்கும் கதையாக இந்த கதையை மாற்றுவோம் என்று கூறினார். இந்தப் படத்தில் வரும் மக்களின் கலாசாரம் என்ன? யாரை வழிபடுகிறார்கள்? எந்த மாதிரியான துணிகளைப் போடுவார்கள்? எந்த மாதிரியான திருவிழா நடக்கும்? என்ன சாப்பிடுவார்கள்? அந்த மண்ணில் என்ன விளையும்? மண்ணின் தன்மை என்ன? மக்களின் தன்மை என்ன? தொழில் என்ன? பார்ப்பதற்கு எப்படி இருப்பார்கள்? என இது போன்று ஒவ்வொன்றையும் தெரிந்து கொண்டோம். அவர்கள் பேசும் மொழியிலிருந்து கொஞ்சம் மாற்றினால் எப்படி இருக்கும் என யோசித்து வார்த்தைகள் சேர்த்து எல்லாவற்றையும் பைபிள் போன்று சேர்த்து வைத்திருந்தேன். வசனம் எழுதச் செல்லும் பொழுது அதிலிருந்துதான் குறிப்பு எடுத்தேன். படம் இரண்டரை வருடமாக நடந்து வந்தது. ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு இடத்தில் நடக்கும் பொழுது அங்கு நேரடியாகச் சென்று பைபிளில் உள்ள சொற்களைப் பார்த்து அதன் உதவியோடு வசனங்கள் எழுத ஆரம்பித்தேன். இதுபோன்ற செயல்கள் எனக்குச் சவாலாக இந்த படத்தில் அமைந்திருந்தது.

ஸ்டோரி போர்டிற்கு உயிர் கொடுப்பதே வசனங்கள்தான். காட்சியாக ஸ்டோரி போர்டில் காட்டுவர். ஆனால், அந்த இடத்தில் கதை, கதாநாயகன், கதாபாத்திரம் என்ன பேச வேண்டும் அது எப்படி எதிரொளிக்க வேண்டும் என்பது போன்ற வசனங்களை எப்படி உருவாக்குகிறீர்கள்?

இந்த படத்தில் உதிரன் என்ற கதாபாத்திரமும், கங்குவா என்ற கதாபாத்திரமும் இருக்கின்றன. இருவரின் உலகமும் வேறுபட்டவை. இந்த இருவரின் பயணமும் எதை நோக்கிச் செல்கிறது என்பதை எல்லாம் அந்த கதாபாத்திரத்தையும், அவர்களின் இனத்தையும் புரிந்து கொண்டாலே அவர்களின் மொழியையும், எதை நோக்கிச் செல்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

மதன் கார்க்கி ஆகிய நீங்கள் குழுவாகச் சேர்ந்து மொழிக்காக tool டிசைன் செய்து வருகிறீர். அதுபோல கங்குவா படத்தில் சிறப்பாக உருவாக்கிய டூல் என்ன? அந்த டிசைன் பற்றிக் கூறுங்கள்?

கங்குவாவிற்காக சாப்ட்வேர் டூல் என்று எதுவும் செய்யவில்லை. இந்த படத்திற்காகப் பெரிய போர்டும், பைபிளும் செய்தேன். முழு கதையையும் காட்சியாகப் பார்ப்பதற்கு போர்டு ஒன்றைத் தயார் செய்தேன். படத்தில் நிறைய வார்த்தைகள் தேவைப்பட்டது. அதனால் சில வார்த்தைகளை உருவாக்கிப் பயன்படுத்தி இருக்கிறோம்.

‘கங்குவா’

பாகுபலிக்காக வில்லன் பேசிய மொழியானது இன்று வரை instagram-ல் ரீல் ஆகி வருகிறது. அந்த படத்தில் புதியதாக 720 வார்த்தைகள் உருவாக்கினீர்கள். அது போன்று கங்குவா படத்திலும் வார்த்தைகள் உருவாக்கி இருப்பீர். எத்தனை வார்த்தைகள் உருவாக்கி இருக்கிறீர்கள்?

கங்குவா படத்தில் 15 சொற்கள்தான் புதிதாக இருக்கிறது. பாகுபலி படத்தில் அவர்கள் வேறு மொழி பேசுகிறார்கள். அந்த மொழி ஒரு பயத்தை உருவாக்க வேண்டும் என்ற அந்தப் படத்தின் நோக்கில் தான் அம்மொழியை உருவாக்கினோம். ஆனால், இந்த படத்தில் யாருக்கும் புரியாமல் போகக்கூடாது, எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக வார்த்தைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் புதிய வார்த்தைகள் பெரிதும் பயன்படுத்தவில்லை.

முதலில் நிறைய வசனங்கள் எழுதிப் படிக்கும் பொழுது நன்றாக இருந்தது. ஆனால், அதைப் படித்துக்காட்டும் பொழுது நிறைய வார்த்தைகள் புரியவில்லை. மீண்டும் இரண்டாவது முறை எளிய முறையில் வசனங்கள் எழுதினோம். அதில் நிறைய வார்த்தைகள் புரிந்தது. எடிட்டிங் செய்யும் பொழுது இந்த வார்த்தைப் புரியவில்லை என்று ஒரு சில வார்த்தைகள் வரும். அந்த வார்த்தைகளை இன்னும் எளிமையாக மாற்றி மீண்டும் டப் செய்துள்ளோம். இந்த படத்தைப் பார்ப்பவர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தர வேண்டும் எனவும் எளிய மக்களுக்கும் புரிய வேண்டும் எனவும் இரு நோக்கத்தில் இப்படத்தை அமைத்துள்ளோம்.

கங்குவா

நான் எழுதுவதை மற்றவர்கள் பேசும் பொழுது அது வேறுபடலாம். வார்த்தைகளின் வீரியம், வேறாக மாறும். எடுத்துக்காட்டிற்கு, ‘நான் அவனைக் கொல்லவில்லை’ என்பது சொல்லும் விதத்தில் பொருள் மாறுபடும். அது எந்த பொருளைத் தரும் வகையில் வசனம் அமைய வேண்டும் என்பது அந்த எழுத்தாளனுக்கு மட்டுமே தெரியும். எனவே என்னுடைய வசனம் எழுதும் விதமானது எழுதுவது மட்டுமின்றி, அதைப் பேசும் ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் நான் பயணிக்க வேண்டும். அந்த வசனத்தைச் சரியாகப் பேசுகிறார்களா? அவர்கள் சொன்னது சரியாக இருக்குமா? எனப் பார்ப்பேன். படத்தில் குழுவாகப் பேசும் பொழுதும் வெறுமனே பேசாமல், இந்த வார்த்தைகளை இப்படிதான் பேச வேண்டும் எனப் பிரித்துத் தருவேன். பாகுபலி, புஷ்பா ஆகிய படங்களில் குழுவாகப் பேசும் வசனங்களைக் கவனித்தால் அது தெரியும். புஷ்பா படத்தில் குழு வசனமானது தெலுங்கு படம் தானே, எனவே தெலுங்கு மொழியிலேயே குழு வசனம் இருக்கட்டும் என்று கூறிய பொழுதும், அதைத் தமிழ் மொழியில் டப் செய்த பொழுது தமிழில் அதை மாற்ற வேண்டும் என மாற்றி எழுதினேன்.

எழுத்தாளனின் பணியானது எழுத்தோடு முடிவதில்லை. முழு டப்பிங் முடியும் போதுதான் எழுத்தாளரின் வேலை முடிகிறது. ஏனெனில் நாம் நினைத்தது ஒன்றாகவும், படத்தில் வேறொன்றாகவும் மாறும். அதற்காகவே டப்பிங் என்பது இரண்டாவது வாய்ப்பாக நமக்கு அமையும். நாம் திரும்பவும் சில வசனங்களை மாற்றவும் முடியும்.

தற்போது உருவாக்கப்படும் புதிய வார்த்தை மக்களிடையே சென்று சேர சிறிது காலம் எடுக்கும். அது போன்ற அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா?

ஆம். Date Night என்ற சொல்லிற்கு உலவிரவு என்ற வார்த்தையை உருவாக்கிப் பாடலில் பயன்படுத்தினோம். ‘நானும் என் மனைவியும் உலவிரவு சென்றோம்’ என அந்த வார்த்தையைப் பயன்படுத்தி ஒருவர் என்னிடம் கூறினார். அதைக் கேட்கும் பொழுது புதிய வார்த்தையை மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது மகிழ்ச்சியை அளித்தது.

700 வருடங்களுக்கு முன்பிருந்த மக்களின் வாழ்வியலைத் திரையில் காட்டப் போகிறீர்கள். எடுத்துக்காட்டிற்கு, தங்கலான் படத்தில் சில விஷயங்களைப் பார்த்தோம். அந்த படத்தில் பயன்படுத்திய மொழியானது மிகவும் ஆழமானதாக இருந்தது. நிறைய பேர் புரிந்து கொண்டனர். சில பேருக்குப் புரியவில்லை என்றும் கூறினர். ஒரு எழுத்தாளராக இதை அனைத்தையும் யோசித்து கங்குவாவிற்கு என்ன மாதிரியான கலந்துரையாடல் நடந்தது?

நானும் சிவாவும் தங்கலான் படத்திற்குச் சென்று பார்த்தோம். அன்றைக்குப் படத்தைப் பார்க்கும் பொழுது, சப்டைட்டில் இல்லை என்பதால் முதல் கால்வாசி படம் புரியவில்லை. இன்னும் அந்த படம் புரிந்திருந்தால் அனுபவித்து அந்த படத்தைப் பார்த்திருப்பேன் என்ற ஏக்கம் இருந்தது. அதைப் பார்த்து வந்த பிறகு, வசனம் எல்லாம் அனைவருக்கும் புரியட்டும் மிகவும் அந்நியப்படுத்தத் தேவையில்லை என்று எண்ணினோம் .

இந்த படத்தில் நந்தன் என்ற குழந்தை நன்றாக நடித்தான். வசனத்திற்காக மீண்டும் அழைத்து அச்சிறுவனைப் பேச வைத்தோம். கதையை முழுக்க முழுக்க சிவா எனக்குக் கூறி இந்த சீனில் இத்தனை வசனங்கள் வேண்டும் எனக் கேட்பார், நானும் வசனங்கள் எழுதி அனுப்புவேன். சில வசனங்கள் ஷூட்டிங்கில் புதிதாக சிவா சேர்த்துக் கொள்வார்.

கங்குவா படத்தை ஒரு குறிப்பிட்ட சீன்கள் மட்டும் எழுதி படம் எடுக்க ஆரம்பித்துவிட்டோம். அதற்கு அடுத்து என்ன நடக்கும் என்பதை சிவா கூற நான் எழுதி அனுப்புவேன். படத்தைப் பற்றி முழு காட்சிகளும் சிவாவுக்குள் பதிந்திருந்தன. எந்த அளவிற்கு எனில், ஒரு சீன் எடுத்து முடித்துவிட்டு அடுத்து ஒன்பது மாதம் கழித்தும் அதன் தொடர்ச்சியை எடுக்கும் அளவிற்கு மேஜிக்கான மனிதர்.

kanguva

700 வருடங்களுக்கு முன் என் முன்னோர்கள் இருந்துள்ளனர், அவர்களுக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமையை வசனத்தின் மூலம் கொடுக்க முடியும் என்றிருக்கும் பொழுது அதற்கு நீங்கள் என்ன மாதிரியான முறையைத் தேர்வு செய்தீர்கள்?

உணர்வுகள்தான். ஏனெனில், மொழி மாறும், சொற்கள் மாறும், இப்படி காலம் மாற மாற அனைத்தும் மாறும். ஆனால், மாறாமல் இருப்பது உணர்வுகள் மட்டும்தான். சிவா மிகவும் அழகாக அந்த உணர்வுகளை அளித்துள்ளார். அதுதான் அடுத்த காலத்திற்கு எடுத்துச் செல்லும். உணர்விற்கும், உணர்ச்சிகளுக்கும் மொழி தேவையில்லை. எழுத்தாளனின் மிகப்பெரிய வேலை வசனத்தைத் தவிர்ப்பதுதான். வசனங்கள் எழுதுவது மட்டும் இல்லை. நான் எந்த படத்தில் வேலை செய்தாலும், இதைத்தான் செய்வேன். தேவையில்லாத வசனங்களை நீக்கி விடுவதும்தான் சிறப்பானதாகும்.

கங்குவா படத்தில் அதிகமாகக் காட்சிகள் இருக்கும். வசனங்கள் குறைவாக இருக்கும். இவ்வாறு, வசனங்களையும் குறைவாகச் சொல்ல வேண்டும். அதில் நிறைய விஷயங்களையும் சொல்ல வேண்டும் என்பதே மிகவும் சவாலான விஷயமாகும். 50 வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை எப்படி ஐந்து வார்த்தைகளில் கூறி புரிய வைப்பது என்பது தெரிந்தாலே இது சாத்தியம் தான்.

படம் டப் செய்து முடித்த பிறகு நடிகர் சூர்யா உங்களிடம் என்ன கூறினார்?

சூர்யா இந்த படம் முழுவதையும் மிகவும் அனுபவித்து நடித்துள்ளார். கங்குவா படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே அடுத்தடுத்த படங்களில் நீங்கள் செய்ய வேண்டும் என இரண்டு மூன்று படங்களில் என்னை அறிமுகம் செய்து வைத்தார். நான் பார்த்ததில் மிகவும் அன்பான மனிதர். அவருடைய கதாபாத்திரத்தில் என்ன கவனம் செலுத்துகிறாரோ, அதே அளவிற்கு மற்ற கதாபாத்திரத்திலும் கவனமாக இருப்பார். ‘இந்த கதாபாத்திரத்திற்கு இப்படிக் கொடுங்கள், இந்த கதாபாத்திரத்தை இன்னும் உயர்த்தி கூறுங்கள், அனைவருக்கும் வசனங்களைச் சக்தி வாய்ந்ததாகக் கொடுங்கள்’ என்று கேட்பார். அந்த தன்மையுடைய கதாபாத்திரம் தான் கங்குவா ஆகும்.

சூர்யாவின் நடிப்பை இந்தப் படத்தில் நாம் அனைவரும் பார்க்கப் போகிறோம். ஆனால், அதற்குப் பின்னால் உள்ள அவரின் உழைப்பு அலாதியானது.

‘கங்குவா’ சூர்யா

டப்பிங்கில் இருக்கும் பொழுதும், ஷூட்டிங் நடுவில் டப்பிங் செய்யும் பொழுதும் அனைவருக்கும் நல்ல சாப்பாடு செய்து தருவார். தன்னுடன் செப் ஒருவரை வைத்துக்கொண்டு இன்டர்நேஷனல் உணவெல்லாம் செய்து அனைவருக்கும் தருவார். ஆனால், அவர் மட்டும் ஒரே ஒரு சாலட், எக்வைட் மட்டும்தான் சாப்பிடுவார். ஏனெனில் அவர் ஒர்க்அவுட் செய்து வருவதால் உடல் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று இருப்பார். அவருடைய நிலைக்கு எளிமையாக சிஜி பண்ணிடலாம், பாடி ஷூட் போலச் செய்யலாம் என்று கூற முடியும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. அந்த உழைப்புதான் அவருடைய வெற்றிகளுக்கெல்லாம் காரணம். அதுவும் டப்பிங் பேசும் பொழுதெல்லாம் சரியாக வரவில்லையென்றால் ஒரு சில வசனங்கள் மதியம் வரை சென்று விடும். கோபமாக வரும் வசனங்களைப் பேசும்பொழுது குரலே வராது, அடுத்த நாள் வந்து பேசி கொடுப்பார்.

கங்குவாவில் உள்ள வில்லன் கதாபாத்திரத்திற்கு எழுதிய வசனம் பற்றி சொல்லுங்கள்?

ஒரு கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்களின் ஆடை அணிகலன்களைப் பார்த்து இது இந்த கதாபாத்திரம் எனக் கண்டறிய முடியும். மேலும் மறு வைப்பது, பெரிய மூக்கு வைப்பது என வித்தியாசப்படுத்தியும் காட்டுவர்.

எழுத்தாளரின் அடுத்த கட்டமானது வசனங்கள் ஆகும். அவர்களின் உருவம் தெரிய வேண்டியதில்லை, பேசும் விதத்தை வைத்தே யார் என்பதை அறிய முடிவதே சிறந்த எழுத்தாகும்.

இதற்கும் அடுத்த கட்டம், “வசனம் இல்லாமலும், அவர்கள் யாரும் இல்லாத போதும் மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, யாரும் சொல்லாமல் அவர்களை ஞாபகப்படுத்த முடியுமானால் அதுவே சாலச் சிறந்த எழுத்தாகும்” என அரிஸ்டாட்டில் பிளாட்டோவிடம் கூறியுள்ளார்.

kanguva

தங்களுக்குள் உள்ள கதாபாத்திரத்தை அடையாளம் காண வசனம் மிக முக்கியமானதாகும். இந்த படத்தில் வில்லனாக நடிப்பவர் குறைவாகத்தான் பேசுவார். அவர் பேசும்பொழுது எதற்காகப் பேசுகிறார்? அந்த இனத்தின் கொள்கை என்ன? எதற்காக அவர் அதைச் செய்கிறார்? என்பது போலப் பல கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.

கங்குவா படத்தைப் பார்த்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றியது?

எழுத்திலிருந்து 50 சதவீதம் திரையில் பார்க்கும் பொழுதே மிகவும் சந்தோஷமாகிவிடும். டப்பிங் பார்க்கும் பொழுதே சிஜி இல்லாமல் இசை இல்லாமல் பல தடவைப் பார்த்துள்ளேன். நான் எப்பொழுதும் பெருமளவு உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் மட்டுமே பார்ப்பேன். சிவா அவர்களும் அவரின் மொத்த குழுவும் அனுபவித்து இந்த படத்தில் வேலை செய்துள்ளனர். சிஜி மற்றும் இசையோடும் படத்தைப் பார்த்ததில் எழுதும் பொழுது இருந்ததற்கும் இன்று படத்தைப் பார்ப்பதற்கும் 200 சதவீதம் உயர்ந்ததாக நினைக்கிறேன். கங்குவா போன்ற படத்தில் இணைந்திருப்பது பெரிய வாய்ப்பாக நினைக்கிறேன்.”

– மு.மகாலட்சுமி

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.