லத்தூர்: மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.3,000, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். மேலும், “பாஜக அரசு கொடுத்த வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றுது இல்லை” என்று அவர் கூறினார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு லத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மல்லிகார்ஜுன் கார்கே, “மகாராஷ்டிர நிலம் சத்ரபதி சிவாஜி, லோகமான்ய திலகர், ஜோதிபா பூலே, சாவித்ரி பாய் புலே, பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற பெரிய மனிதர்களின் பூமி. இங்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைகள் வழங்கப்படும், அனைவரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும், வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை திரும்ப கொண்டு வருவோம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்றெல்லாம் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், வாக்குறுதி அளித்ததைத் தவிர அவர் எதுவும் செய்யவில்லை. பாஜக அரசு கொடுத்த வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றுவதில்லை. நரேந்திர மோடி மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளார். மகாராஷ்டிராவின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவர்களின் கனவுகளை சிதைத்து ஏமாற்றியுள்ளது.
ஆனால், நாங்கள் சொல்வதைச் செய்கிறோம். நமது அரசு வந்தவுடன், பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும். உங்கள் உரிமைகள் அரசியலமைப்பால் மட்டுமே பாதுகாக்கப்படுகின்றன. இந்த அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்றி, இங்கு மகா விகாஸ் அகாதி அரசை, மக்கள் அரசை அமைப்போம்” என தெரிவித்தார்.