தியோகர் (ஜார்க்கண்ட்): எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஆபத்தான நோக்கங்களை காங்கிரஸ் கட்சி கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சரத் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், “இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை வரலாற்று ரீதியாக எதிர்த்து வந்த காங்கிரஸ், தற்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஆபத்தான நோக்கங்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களின் உரிமைகளை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் அக்கட்சி செயல்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்கள் தங்கள் பலத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்கள் விழிப்புடனும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டிய நேரமிது.
இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்தும் காங்கிரஸ் கட்சியின் முயற்சிகள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சியில் தொடங்கியது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) காட்டியுள்ளார். அவரது தந்தை ஒருமுறை இந்த முயற்சியில் தோல்வியை சந்தித்தார். அதன் பின்னர் பெரும்பான்மையை மீண்டும் பெற காங்கிரஸ் போராடியது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்கள் கணிசமாக இருக்கும் பகுதிகளில் காங்கிரஸ் அழிக்கப்பட்டு விட்டது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆகியவை தங்கள் குடும்பங்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றன. அவர்கள் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். ஆனால், நான் உங்கள் குடும்பத்தைப் பற்றி கவலைப்படுகிறேன்.
ஜே.எம்.எம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஜார்க்கண்டின் இயற்கை வளங்களை தவறாக நிர்வகிக்கின்றன. தண்ணீர், காடுகள், நிலம், மணல், நிலக்கரி மற்றும் அரசு வேலைகளை கூட அவர்கள் திருடியுள்ளனர். சில காங்கிரஸ் தலைவர்கள் பெண் பழங்குடித் தலைவர்களை “இழிவுபடுத்தும்” கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாஜக அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதற்கு, திரவுபதி முர்மு குடியரசுத் தலைவராக்கப்பட்டது ஒரு சிறந்த உதாரணம்.
ஜார்க்கண்ட்டில் வெளிநாட்டு ஊடுருவல் கவலை அளிப்பதாக உள்ளது. சந்தால் போன்ற பகுதிகளில் பழங்குடியின மக்கள் தொகை கணிசமாகக் குறைந்துள்ளது. நாம் நமது பழங்குடி குடும்பங்களையும் ஜார்கண்ட் வாசிகள் ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டும். பாஜக தலைமையிலான நிர்வாகம், ஜார்க்கண்டின் வளங்கள், அடையாளம் மற்றும் அதன் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும். உணவு, பெண்கள், நிலம் ஆகியவற்றை பாதுகாக்க முன்னுரிமை அளிக்கும். பெண்கள் அதிகாரம் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் வளமான எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியம்” என தெரிவித்தார்.
ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெறும். நவம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.