சென்னை: “மருத்துவ சங்கங்கள் அதிகபட்சமாக கேட்ட பாதுகாப்பு தொடர்புடைய நடவடிக்கைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருக்கிறோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படும். அதுதொடர்பாக மருத்துவ சங்கங்கள் அறிவிக்கும்,” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ சங்கங்கள் உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற ஓர் இளைஞர், கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த புற்றுநோயியல் மருத்துவர் பாலாஜியை தாக்கியுள்ளார். விக்னேஷ் மறைத்து கொண்டு வந்திருந்த சிறு கத்தியின் மூலம் மருத்துவருக்கு 7 இடங்களில் காயங்களை ஏற்படுத்தியிருக்கிறார். விக்னேஷைப் பிடித்தவர்கள் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் நலமுடன் இருக்கிறார். சிறிதுநேரத்துக்கு முன்னா் வீடியோ காலில் என்னுடன் உரையாற்றினார். மருத்துவர் பாலாஜி மிக சிறப்பான மருத்துவர். கிண்டி மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிறப்பான மருத்துவ சேவையை தந்தவர்.
விக்னேஷின் தாயார் காஞ்சனா கடந்த 6 மாதங்களாக புற்றுநோய்க்காக கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்திருக்கிறார். முற்றிய நிலையிலான புற்றுநோய்க்கு அவர் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். 6-7 முறை அவருக்கு கீமோதெரபி உள்ளிட்ட சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. தனது தாய்க்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவரிடம் தகராறில் ஈடுபட்ட விக்னேஷ் அவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார். இந்தப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசு மருத்துவர்கள் சேவை மனப்பான்மையோடு தமிழகத்தில் ஆத்மார்த்தமாக பணியாற்றி வருகின்றனர். மருத்துவத்தில் குறைபாடு என்ற போலியான காரணத்தைக் கூறி தாக்குதல் நடத்துவது என்பது கண்டிக்கத்தக்கது. இந்தச் சம்பவத்தில் விக்னேஷ் மட்டும்தானா வந்தாரா அல்லது வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்தச் சம்பவம் நடந்து முடிந்தவுடன் ஒருசில மருத்துவ சங்கங்களின் சார்பில் வேலைப் புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை அறிவித்திருந்தார்கள். உடனடியாக சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகளை அழைத்து, கிட்டத்தட்ட 3 மணி நேரம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தையின்போது, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்களுக்கு இருக்கும் குறைகளை அவர்களும் தெரிவித்தனர். குறிப்பாக, மருத்துவமனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மருத்துவ சங்கங்கள் வலியுறுத்தினர்.
சம்பவம் நடந்த கிண்டி மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் முதல்வரின் உத்தரவின்பேரில் தற்போது திறக்கப்பட்டிருக்கிறது. காவல் துறை சார்பில், தேவைப்படும் இடங்களில் புறகாவல் நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை கடந்த 3 மாதங்களாக செய்து வருகிறோம். அந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
மேலும், இந்தப் பேச்சுவார்த்தையின்போது, நோயாளிகள் உடன் வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், சரிபடுத்தவும் வலியுறுத்தி உள்ளனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ளதைப்போல, நோயாளிகள் உடன் வருபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ சங்கங்கள் அதிகபட்சமாக கேட்ட பாதுகாப்பு தொடர்புடைய நடவடிக்கைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருக்கிறோம். வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் குறித்து மருத்துவ சங்கங்கள் அறிவிக்கும்,” என்று அவர் கூறினார்.