வயநாடு: வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக சகோதரி பிரியங்கா காந்திக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ராகுல் காந்தி, தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வயநாட்டில் சுற்றுலா மேற் கொண்டார். அப்போது அவர் மிக நீளமான ஜிப் லைனில் சாகச பயணம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் கனமழை காரணமாக வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் நீட்சியாக வயநாட்டுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில், வயநாடு சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில் ‘ஐ லவ் வயநாடு’ என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட டீசர்ட்டில் ராகுல் சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நிலச்சரிவால் சுற்றுலாவைநம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடைகள் முதல் தங்கும் விடுதிகள் வரை அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன. அம்மக்களின் கதை என்னை துயருரச் செய்
கிறது. அதேசமயம் அவர்களின் விடாமுயற்சியும் தாக்குப்பிடிக்கும் திறனும் என்னை வியப்படையச் செய்கிறது. மிக அழகான நிலம் இது. வயநாட்டின் சுற்றுலாவை மேம்படுத்த நானும் பிரியங்கா காந்தியும் உறுதிபூண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்