புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளை இடிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை இடிக்கும்போது, 15 நாட்களுக்கு முன்பாகவே நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் நேற்று புல்டோசர் நடவடிக்கைக்கு எதிரான பல்வேறு கருத்துகளை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் பொருந்தக்கூடிய வழிகாட்டு நெறிமுறை கொண்ட விரிவான தீர்ப்பையும் வழங்கியது.
இதன்படி நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: குற்றம்சாட்டப்பட்டவரின் வீடு முறையான அறிவிப்பு இல்லாமல் இடிக்கப்படும்போது, அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு, அதற்கான இழப்பீடு கோரும் நிலை ஏற்படும். வீடு என்பது ஒவ்வொருவருக்கும் கனவு. அது கலைந்து போய்விடக் கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் இருக்கும் சட்டத்தைக் கொண்டு மக்களை பாதுகாக்க வேண்டும்.
அரசின் அனுமதி தேவை: ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை இடிக்கும்போது, முன்கூட்டியே 15 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய பிறகே செயல்படுத்த வேண்டும். நோட்டீஸ் தொடர்பாக அவர்கள் பதிலளிக்கத் தவறினால், மாநில அரசின் அனுமதியுடன்தான் வீடு இடிக்கப்பட வேண்டும்.
குற்றம்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக அறிவித்து அவருடைய வீட்டை இடிக்க உத்தரவிட நிர்வாகிகள் நீதிபதியாகிவிட முடியாது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளி என அறிவிக்கப்பட்டதாலேயே அவர்களுடைய வீடுகள் இடிக்கப்படுவது முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
பார்க்க மகிழ்ச்சியாக இல்லை: குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு ஒரு குறிப்பிட்ட உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கிரிமினல் சட்டத்தின் கீழும் உள்ளது. ஒரேநாள் இரவில் பெண்கள், குழந்தைகள் தெருவுக்கு வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இல்லை. வீடுகள் இடிக்கப்படும் நடவடிக்கையை முழுவதுமாக வீடியோ எடுக்க வேண்டும்.
பல ஆண்டுகள் கடினமாக உழைத்து சராசரி மனிதர் வீடு கட்டுகிறார். இது அவருடைய கனவு, அபிலாஷைகள். பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்துக்காக கட்டுகிறார். அதை அவர்களிடம் இருந்து பறித்துவிட்டால், அது அதிகாரிகளை திருப்திபடுத்துவதற்காக மட்டுமே தவிர வேறொன்றும் இல்லை. இவ்வாறு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.