அமெரிக்க வெளியுறவு மந்திரியாக மார்க்கோ ரூபியோவை நியமிக்க டிரம்ப் பரிந்துரை

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தனது மந்திரி சபை மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறும் தலைவர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்க வெளியுறவு மந்திரியாக மார்க்கோ ரூபியோவை நியமிக்க டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.

இது குறித்து பேசிய டிரம்ப், “மார்க்கோ ரூபியோ ஒரு மதிப்புமிக்க தலைவர். அவர் சுதந்திரத்தின் குரலாக இருப்பார். அவர் நம் தேசத்தின் வலிமையான பிரதிநிதியாகவும், நமது கூட்டாளிகளுக்கு உண்மையான நண்பராகவும், நமது எதிரிகளிடம் ஒருபோதும் பின்வாங்காத அச்சமற்ற வீரராகவும் இருப்பார். அமெரிக்காவையும், உலகத்தையும் மீண்டும் பாதுகாப்பாகவும், சிறந்ததாகவும் மாற்ற மார்கோவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

மார்க்கோ ரூபியோ, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மயாமி நகரில் 1971-ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் கியூபாவில் இருந்து அமெரிக்காவுக்கு அகதிகளாக குடியேறியுள்ளனர். புளோரிடா பல்கலைக்கழகம் மற்றும் மயாமி சட்ட பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்ற மார்க்கோ ரூபியோ, மேற்கு மயாமியின் ஆணையராகவும், புளோரிடா சட்டசபை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 2010-ம் ஆண்டு அமெரிக்க செனட்டராக தேர்வானார்.

தற்போது 3-வது முறை செனட்டராக பதவி வகித்து வரும் மார்க்கோ ரூபியோ, அமெரிக்க ராணுவ விவகாரங்கள் துறையை சீர்திருத்தும் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். உய்குர் கட்டாய தொழிலாளர் தடுப்புச் சட்டத்தையும் அவர் நிறைவேற்றினார். இந்த சட்டம் அமெரிக்கா-சீனா இடையிலான உறவில் திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.