16-வது நிதி ஆணைய குழு வரும் நிலையில் பொருளாதார நிபுணர் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகத்துக்கு 4 நாள் பயணமாக 16-வது நிதி ஆணைய குழுவினர் வர உள்ள நிலையில், நிதி அமைச்சர் மற்றும் பொருளாதார நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் 16-வது நிதி ஆணையத்தை மத்திய அரசு கடந்த டிசம்பர் 31-ம் தேதி அமைத்தது. இதில், அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியாகாந்தி கோஷ் ஆகிய 4 உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழுவினர் வரும் 17-ம் தேதி தமிழகம் வருகின்றனர். ஆணையத்தின் செயலர் ரித்விக் பாண்டே, இணை செயலர் ராகுல் ஆகியோரும் உடன் வருகின்றனர்.

நவ.17-ம் தேதி மாலை சென்னை வரும் இக்குழுவினர், நங்கநல்லூரில் வசிக்கும் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் வீட்டுக்கு சென்று, அவரை சந்திக்கின்றனர். அன்று இரவு, கிண்டி ஐடிசி ஓட்டலில் முதல்வர் ஸ்டாலின் அளிக்கும் விருந்தில் பங்கேற்கின்றனர்.

நவ.18-ம் தேதி தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். நவ.19-ம் தேதி நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பகுதி, ஸ்ரீபெரும்புதூரில் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி நிறுவனமான சால்காம்ப் வளாகம் ஆகியவற்றை பார்வையிடுகின்றனர். பின்னர், அங்கிருந்து ராமேசுவரம் சென்று, ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்கின்றனர்.

நவ.20-ம் தேதி தனுஷ்கோடி, ராமநாதபுரம் நகராட்சி, கீழடியில் தொல்லியல் அகழ்வு நடைபெறும் பகுதியை பார்வையிடுகின்றனர். பின்னர், மதுரை வந்து அங்கிருந்து பிற்பகல் 2.45 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். 16-வது நிதி ஆணைய குழுவினர் 4 நாள் பயணமாக தமிழகம் வர உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை தனது முகாம் அலுவலகத்தில் இருந்தபடி, முதல்வருக்கான பொருளாதார நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் முருகானந்தம், நிதித் துறை செயலர் உதயச்சந்திரன், பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர்கள் எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், ழான் திரேஸ், எஸ்.நாராயண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.