சர்வாதிகாரம் இல்லாமல் எதையும் சரி செய்ய முடியாது என்று சீமான் பேசியிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருநெல்வேலியில் நேற்று (நவம்பர் 15) பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது, கருத்து தெரிவிக்க முயன்ற அக்கட்சியின் சில நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பேச முயன்ற நெல்லை மாவட்ட நிர்வாகிகள், கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது.
நா.த.க கலந்தாய்வுக் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நெல்லை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கலந்தாய்வுக் கூட்டத்தில் சீமான் மட்டுமே பேசினார். கடைசியாக நான் எழுந்து, மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளைப் பேச முயன்றேன்.
என்னைப் பேச விடாமல், ‘இது என் கட்சி, இங்கு நான் மட்டும்தான் பேசுவேன்’ எனக் கூறினார். அதுமட்டுமில்லாமல், ‘நீ யார், சாதிய அடிப்படையில் செயல்படுகிறாய், வெளியே போ’ எனத் திட்டினார். நான் வெளியே வந்துவிட்டேன்” என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த சீமான், “ஒரு நேர்மையாளர், சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும்.
சர்வாதிகாரம் இல்லாமல் எதையும் சரி செய்ய முடியாது. சர்வாதிகாரம் இல்லாத எந்த செயலும் நேர்மையாக இருக்காது. காமராஜர், நேரு போன்ற மிகச்சிறந்த ஆட்சியாளர்கள், அன்பான சர்வாதிகாரியாகத்தான் இருந்துள்ளார்கள். படிக்காத மாணவனுக்குப் பாடம் மனதில் நிற்க வேண்டும் என்பதற்காக, ‘அப்பாடத்தை 10 முறை வீட்டுப்பாடமாக எழுதிட்டு வா’ என்று ஒரு ஆசிரியர் சொல்வது அம்மாணவனின் பார்வையில் சர்வாதிகாரம். ஆனால், ஆசிரியர் பார்வையில் அது மாணவனின் நலனுக்கானது.
கட்சி விதிகளுக்குக் கட்டுப்படவில்லை என்றால் எவ்வளவு பெரிய கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் இடமில்லை. இது வெகுதூரப் பயணம். நான் சர்வாதியாக இருக்கிறேன் என்றால் போய்விடு. சர்வாதிகாரம் இல்லாத இடத்துக்குப் போய்விடு. இது என் கட்சி பிரச்னை. நாட்டுப் பிரச்னையா? மக்கள் பிரச்னையா? இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?” எனக் காட்டமாகப் பதிலளித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb