புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு கலாச்சாரம் அவசியம் தேவை; அதற்கு வாரத்துக்கு ஆறு நாள் முக்கியம் என்ற தனது நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சிஎன்பிசி குளோபல் லீடர்ஷிப் உச்சி மாநாட்டில் அவர் பேசினார். அப்போது அவர், “தேசத்தின் முன்னேற்றத்துக்கு கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். அந்த அயராத கடின உழைப்புக்கு முன்மாதிரியாக பிரதமர் மோடி உள்ளார்.
நாட்டில் வலுவான பணி சார்ந்த நெறிமுறை இல்லாமல் நம்மால் உலக நாடுகளுடன் வளர்ச்சி சார்ந்து போட்டியிட முடியாது. இந்தியாவின் வளர்ச்சி நம் முயற்சியில் தான் உள்ளது.” என்று கூறினார்.
மேலும், தனது பணி அனுபவத்தில் நாள் ஒன்றுக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். 1986-ல் வாரத்துக்கு 5 நாள் மட்டுமே வேலை என்ற மாற்றம் தனக்கு ஏமாற்றம் தந்ததாக அவர் தெரிவித்தார். மேலும், வாரத்துக்கு 6 நாள் வேலை அவசியம் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும். அந்த கருத்தை தன் கல்லறை வரை கொண்டு செல்வேன், ஒருபோதும் மாற்றிக் கொள்ளபோவதில்லை என அவர் தெரிவித்தார்.
இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்: கடந்த ஆண்டு நாராயண மூர்த்தி பணி நேரம் குறித்து முன்வைத்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர், “நாம் பணி சார்ந்த உற்பத்தித் திறனை மேம்படுத்தாத வரையில், ஊழலைக் குறைக்காத வரையில், அதிகார வர்க்கத்தில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்காத வரையில் வளர்ந்த நாடுகளுடன் நம்மால் போட்டியிட முடியாது. அதனால் எனது வேண்டுகோள் என்னவென்றால் இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இதை நான் சொல்ல காரணம் இந்தியா எனது நாடு. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாட்டில் இதுதான் நடந்தது. குறிப்பிட்ட ஆண்டு காலம் அனைத்து ஜெர்மனி மக்களும் கூடுதல் நேரம் வேலை செய்வதை உறுதி செய்தது.
மிகவும் கடினமாக உழைக்கும் வகையில் நாம் மாற வேண்டும். அது நடந்தால் தான் பொருளாதார ரீதியாக உலக அளவில் நம் நாடு வளர்ச்சி காண முடியும். அந்த செயல்திறன் அங்கீகாரம் அளிக்கும், அது மரியாதையையும், அதிகாரத்தையும் வழங்கும். அதனால் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு நான் சொல்வதெல்லாம் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் என அடுத்த 20 – 50 ஆண்டுகள் வரை உழைக்க வேண்டும். அப்போது தான் ஜிடிபி-யில் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் இந்தியாவால் இருக்க முடியும்.
இந்தியாவின் தொலைதூர கிராமத்தில் உள்ள ஏழை குழந்தையின் எதிர்காலம் நமது இளைஞர்களின் தோள்களில் உள்ளது. அந்த பொறுப்பை அவர்கள் உணர வேண்டும்” என தெரிவித்தது விவாதப் பொருளானது. இப்போது 6 நாள் வேலை பற்றி அவர் ஆணித்தரமான கருத்தை முன்வைத்துள்ளார்.