அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரத்தில் ரூ.1,000 கோடி முதலீடு மற்றும் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிப்காட் தொழிற்பூங்காவில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன்ஷூஸ் (DeanShoes) நிறுவனம் அமைக்கவுள்ள காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ.15) அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழகத்தின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மாற்றம் பெறுவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறது.கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, தமிழ்நாட்டில் டீன்ஷுஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய சீரான, மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அம்முயற்சிகளுக்கு சான்றாக தொழில் ரீதியாக பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் இத்திட்டம் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரம் கிராத்தில் டீன்ஷூஸ் நிறுவனத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்நிறுவனம் தற்போது ரூ.1,000 கோடி முதலீட்டில், 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலணி உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது. அதற்காக பணியை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.முன்னதாக ஜெயங்கொண்டம் நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழுவுருவ சிலையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, வாரணவாசி கிராமத்தில் உள்ள அங்கன் வாடி மையத்தில், ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். மேலும், அரியலூர் அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெறும் அரசு விழாவில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பில் 53 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியும், ரூ.89.94 கோடி மதிப்பில் 507 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, 21,862 பயனாளிக்கு ரூ.173.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, மக்களவை உறுப்பினர்கள் திருமாவளவன், ஆ. ராசா, எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைச் செயலாளர் வி.அருண்ராய், தோல் ஏற்றுமதி கவுன்சில் செயல் இயக்குநர் ஆர் செல்வம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (சிப்காட்) மேலாண்மை இயக்குநர் மருத்துவர் கே.செந்தில்ராஜ், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் பி.அலர்மேல்மங்கை, மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, டீன்ஷுஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் ரிச்சாங்,ஓட்டோயாங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.