நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எக்ஸ்’ சமூக வலைதளமும், குறிப்பாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க்கும் முக்கியப் பங்கு வகித்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்தக் காலகட்டத்தில் ‘எக்ஸ்’ தளம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக பயன்பாட்டை கண்டிருக்கிறது. இந்த தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது டொனால்டு ட்ரம்ப் தான் என்றாலும், உண்மையில் வெற்றி பெற்றது எலான் மஸ்க்தான்.
டொனால்டு ட்ரம்ப்புக்கு தனது வெளிப்படையான ஆதரவை அறிவித்த மஸ்க், அதோடு நின்றுவிடாமல் மிகத் தீவிரமாக எக்ஸ் தளத்தில் ஆன்லைன் பிரசாரம் செய்தும் வந்தார். அத்துடன் தன் பங்காக 120 மில்லியன் டாலர்களையும் குடியரசு கட்சியின் பிரசாரத்துக்காக வழங்கினார். மேலும், தன்னுடைய சமூக வலைதளத்தை இதற்காக மிகவும் வீரியமாக பயன்படுத்தினார்.
இதற்கு நன்றிக்கடனாக தற்போது தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப், அமெரிக்க அரசு திறன்துறையின் (DOGE) தலைவராக எலான் மஸ்க்கை நியமித்துள்ளார். அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகள், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும் இந்தத் துறை செயல்படும்.
ட்ரம்ப்பின் வெற்றியைத் தொடர்ந்து எலான் மஸ்க்கின் நிகர மதிப்பு 20.9 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 300 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. அவரது முதன்மை நிறுவனமான டெஸ்லாவின் பங்கு 14.8% உயர்ந்துள்ளது.
கடந்த 2022 அக்டோபரில் ட்விட்டரை வாங்கிய நாள் முதலே அந்தத் தளத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கப் போகிறது என்பதை தீர்மானித்து விட்டார் மஸ்க். அமெரிக்க மக்களின் ‘அனைத்து’ தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு செயலியாக எக்ஸ் இருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். குறுந்தகவல்கள், பணப் பரிமாற்றம், வீடியோ என சீனாவின் வீ-சாட் (WeChat) போல எக்ஸ் தளத்தை மாற்றுவதற்கான முயற்சியில் அவர் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்.
இன்னொரு புறம் அமெரிக்க அரசியலின் அன்றாடங்களை தீர்மானிப்பதிலும் எக்ஸ் தளத்தை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார் எலான் மஸ்க். தற்போது அவருக்கு அரசு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க தேர்தல் சமயத்தில், எலான் மஸ்க்கின் பதிவுகள் அவரை பின்தொடராதவர்களின் டைம்லைனில் கூட முதலில் வந்து காட்டுபடி வகையில் ‘அல்காரிதம்’ அமைக்கப்பட்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல தேர்தல் தொடங்கிய நாளிலிருந்தே எக்ஸ் தளத்தில் பரவும் ‘சதி’ கோட்பாடுகளும் அதிகரித்து விட்டன. அவற்றில் அமெரிக்க தேர்தலில் இடதுசாரிகளின் தலையீடு உள்ளிட்டவையும் அடக்கம். இவை தொடர்ந்து பயனர்களுக்கு திரும்ப திரும்ப டைம்லைனில் காட்டப்பட்டிருக்கின்றன.
எக்ஸ் தளத்தில் பொய் செய்திகளை கண்டறியும் ‘ஃபேக்ட் செக்’ அம்சம், பயனர்கள் கொடுக்கும் உள்ளீடின் அடிப்படையில் இயங்கக்கூடியது. உதாரணமாக ஏதேனும் ஒரு பதிவில் சென்று நூற்றுக்கணக்கான பயனர்கள் அது தவறான செய்தி என்று தெரிவித்தால், அந்தப் பதிவின் கீழ் இது உண்மைக்கு புறம்பான செய்தி என்று குறிப்பிடப்படும்.
இப்படியான அம்சம் இருந்தும், எக்ஸ் தளத்தில் போலி செய்திகளின் பரவலை கட்டுப்படுத்தமுடியவில்லை என்கிறது ஆய்வு. ஒரு செய்தி பயனர்களால் தவறான செய்தி என்று குறிப்பிடப்பட்டாலும் கூட அந்த பதிவு புதிய பயனர்களுக்கு சென்றடையும் ‘ரீச்’ குறைவதில்லை. இது தேர்தல் காலகட்டத்தில் உச்சத்தை அடைந்ததாக கூறப்படுகிறது.
எலான் மஸ்க்கின் வருகைக்குப் பிறகு, குறிப்பாக அவரது வலதுசாரி ஆதரவுக்குப் பிறகு, ட்விட்டருக்கு (எக்ஸ்) மாற்றாக அதன் நிறுவனர் ஜாக் டார்ஸியால் அறிமுகப்படுத்தப்ப்ட்ட ‘ப்ளூஸ்கை’ செயலிக்கு பலரும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு எக்ஸ் தளத்திலிருந்து 1.5 கோடி பேர் ப்ளூஸ்கை செயலியை நாடி சென்றுள்ளனர். அதேபோல நவம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் சுமார் 275 மில்லியன் பயனர்களை ‘த்ரெட்ஸ்’ தளம் வசப்படுத்தியதும் இங்கே கவனிக்கத்தக்கது. இன்னொரு பக்கம் ட்ரம்ப்பின் சொந்த சமூக வலைதளமான ‘ட்ரூத்’-ல் பெரிய தாக்கம் எதுவும் இல்லை.
கூகுள் தளத்தில் ப்ளூஸ்கை செயலியை தேடும் அமெரிக்க பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய நாள் முதல் அந்த வார இறுதி வரை இந்த எண்ணிக்கை குறையவில்லை. எப்படியாயினும் ப்ளூஸ்கை செயலியால் எக்ஸ் தளத்தின் இடத்தை பிடிப்பதென்பது இப்போதைக்கு சாத்தியமில்லை.
பயனர்கள் செல்வது ஒருபுறம் என்றால், 200 ஆண்டுகால பாரம்பர்யம் கொண்ட பிரிட்டிஷ் நாளிதழான ‘தி கார்டியன்’ எக்ஸ் தளத்தில் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டுள்ளது. தொடர்ந்து எதிர்மறை கருத்துகளால் நச்சுத்தன்மை கொண்டதாக எக்ஸ் மாறிவிட்டதாக ‘தி கார்டியன்’ தெரிவித்துள்ளது.
வலதுசாரி கருத்து திணிப்புகளும், இனவெறியும் எக்ஸ் தளத்தில் ஊக்குவிக்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ அறிக்கையின் மூலம் அந்த நாளிதழ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஆக்கபூர்வமான கருத்து பரிமாற்றங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சமூக ஊடகத்திலிருந்து ‘தி கார்டியன்’ போன்ற பழமையான ஊடகம் வெளியேறுவது என்பது கவலையளிக்கக் கூடிய விஷயம். இதே போக்கு தொடர்ந்து நீடித்தால் ஏற்கெனவே இணையத்தில் பல பிரிவுகளாக பிரிந்து மோதிக் கொள்ளும் சமூகங்களுக்கு இடையே இது மென்மேலும் பகையை உண்டாக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…