சென்னை: ‘திமுக, அதிமுக என இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. தங்களது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள மாறி, மாறி குறை கூறுகின்றனர். நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என இருவரும் நினைப்பதில்லை’ என உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் கடந்தாண்டு மே 29-ம் தேதி அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரி செல்லூர் ராஜூ சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘எதிர்க்கட்சி எம்எல்ஏ என்ற அடிப்படையில் தனது ஜனநாயக கடமையைத்தான் நிறைவேற்றினார். ஆளுங்கட்சியின் குறைகளைத்தான் சுட்டிக்காட்டி பேசினார். முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவில்லை’ என வாதிடப்பட்டது. ஆனால் அரசு தரப்பில், ‘முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூ, முதல்வருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதால் அந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கூடாது. அவர் இந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டும்’ என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.வேல்முருகன், “திமுக, அதிமுக என இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோம் எனக் கூறிக்கொண்டு மாறி, மாறி இருவரும் குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என இருவரும் நினைப்பதில்லை. சாதனை ஒன்றும் சொல்லும்படியாக இல்லை. தங்களின் இருப்பை தக்க வைத்துக்கொள்ள குறை கூறுகின்றனர்’ என அதிருப்தி தெரிவித்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேச்சில் எந்த அவதூறும் இல்லை எனக் கூறி அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே மற்றொரு வழக்கில், “தமிழகத்தில் உள்ள இரண்டு கட்சியினருக்கும் மக்களைப் பற்றி அக்கறை இல்லை,” என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் வேதனை தெரிவித்தார். அதன் விவரம்: ‘தமிழகத்தில் இரு கட்சிகளுக்கும் மக்களைப் பற்றிய அக்கறை இல்லை’ – உயர் நீதிமன்றம் வேதனை