ராஞ்சி: ஜார்க்கண்டில் நடைபெறவுள்ள 2-ம் கட்ட தேர்தலில் ஏராளமான கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அதிக சொத்துகளை கொண்டவராக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அகில் அக்தர் உள்ளார். இவர், பகுர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்கு ரூ.400 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரை அடுத்து, தன்வார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நிரஞ்ஜன் ராம் ரூ.137 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். தன்வார் தொகுதி வேட்பாளர் ஆசாத் சமாஜ் கட்சியைச் (கான்ஷி ராம்) மிகமத் தனிஷ் ரூ.32 கோடி சொத்துகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஏடிஆர் அறிக்கையின்படி, ஜார்க்கண்ட் 2-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 522 வேட்பாளர்களில் 24 சதவீதம் அதாவது 127 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது.