கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர் தலில், அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை என்பிபி கூட்டணி பெற்றுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 24-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 196 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கட்சிகளின் வாக்கு சதவீதத்துக்கு ஏற்ப, எஞ்சிய 29 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த சூழலில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, நாடாளுமன்ற தேர்தல் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 196 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 69 சதவீத வாக்குகள் பதிவாகின. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் என்பிபி கூட்டணி 141 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த கூட்டணிக்கு 61 சதவீத வாக்குகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் என்பிபி கூட்டணிக்கு கூடுதலாக 18 இடங்கள் கிடைத்தன. ஒட்டுமொத்தமாக என்பிபி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதேபோல, தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள் மற்றும் வாக்கு சதவீத அடிப்படையில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 40 இடங்கள் கிடைத்தன. முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணிக்கு 5 இடங்களும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்துள்ளன. இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு 8 இடங்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்தன. மற்ற கட்சிகள் 7 இடங்களை பெற்றுள்ளன.
தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளை பொருத்தவரை, மட்டக்களப்பு மாவட்டம் தவிர்த்து, மற்ற அனைத்து பகுதிகளிலும் என்பிபி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. மட்டக்களப்பில் மட்டும் இலங்கை தமிழ் அரசு கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. யாழ்ப்பாணத்தில் என்பிபி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு தமிழர் கட்சி அல்லாத தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை. மலையக தமிழர்கள் அதிகம் வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் என்பிபி கூட்டணி முதலிடம் பிடித்துள்ளது. கண்டி, மாத்தளை, ரத்தினபுரி, கேகாலை, பதுளை, களுத்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த கூட்டணிஆதிக்கம் செலுத்தியுள்ளது.
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை என்பிபி கூட்டணி பெற்றுள்ளது. கடந்த 2020 நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 145 இடங்களை பெற்றது. மூன்றில் இரண்டுபங்குக்கு குறைவான இடங்களை பெற்றதால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, சில எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற வேண்டிய நிலை இருந்தது. தற்போது என்பிபி கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு
பெரும்பான்மையை பெற்றுள்ளதால், ஆளும் கூட்டணி எந்த ஒரு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் எளிதாக நிறைவேற்ற முடியும்.
அதிபரின் அதிகாரம் குறைப்பு? – இலங்கையில் அதிபர் ஆட்சி நடைமுறை அமலில் உள்ளது. கடந்த 1978-ம் ஆண்டில் அதிபருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், இதுவரை எந்த ஒரு ஆளும்கட்சியும் அதிபரின் அதிகாரங்களை குறைத்தது இல்லை. கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலின்போது, அனுர குமார திசாநாயக்க பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். குறிப்பாக, அதிபரின் அதிகாரத்தை குறைப்பேன் என்று உறுதியளித்தார். நாடாளுமன்ற தேர்தலின்போதும் இதே வாக்குறுதியை முன்வைத்தார்.
‘‘அதிபரின் அதிகாரத்தை குறைக்க, நாடாளுமன்றத்தில் இரண்டில் மூன்று பங்கு பெரும்பான்மை தேவை. இதை கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும். இலங்கை அரசின் அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிப்பேன். சர்வதேச செலாவணி நிதியம் உடனானஒப்பந்தத்தை மேம்படுத்தி, பொருளாதாரத்தை வலுப்படுத்துவேன்’’ என்றும் வாக்குறுதி அளித்தார். இதன் காரணமாகவே, தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் அதிபரின் கட்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்துள்ளனர். கடந்த நாடாளுமன்றத்தில் என்பிபி கூட்டணிக்கு 3 உறுப்பினர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அந்த கூட்டணி 159 உறுப்பினர்களை பெற்றுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.