புதுடெல்லி: நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டார்.
தனது இந்த பயணத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை நான் மேற்கொள்கிறேன். நைஜீரிய அதிபர் போலா அகமது டினுபு-வின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு செல்கிறேன். மேற்கு ஆபிரிக்க பிராந்தியத்தில் நமது நெருங்கிய நட்பு நாடான நைஜீரியாவுக்கு நான் செல்வது இதுவே முதல்முறை.
ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகியவற்றால் பகிரப்பட்ட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட நமது கூட்டாண்மையை உருவாக்க எனது பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும். நைஜீரியாவில் இருந்து இந்தியில் எனக்கு அன்பான வரவேற்புச் செய்திகளை அனுப்பிய இந்திய சமூகத்தினரையும், நண்பர்களையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பிரேசிலில் நடைபெறும் 19வது ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறேன். ஜி-20 அமைப்பின் தலைமையை கடந்த ஆண்டு இந்தியா ஏற்றதை அடுத்து அது மக்கள் G-20 ஆக புதிய உச்சத்தை எட்டியது. உலகளாவிய தெற்கின் முன்னுரிமைகளை அதன் நிகழ்ச்சி நிரல் பிரதானப்படுத்தியது. இந்த ஆண்டு, பிரேசில் இந்தியாவின் பாரம்பரியத்தை கட்டியெழுப்பியுள்ளது.
‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற நமது கண்ணோட்டத்துக்கு ஏற்ப அர்த்தமுள்ள விவாதங்களை இந்த மாநாட்டில் நான் எதிர்பார்க்கிறேன். மேலும் பல தலைவர்களுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் இந்த வாய்ப்பை பயன்படுத்துவேன்.
கயானா அதிபர் முகமது இர்ஃபான் அலியின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்குச் செல்கிறேன். கடந்த 50 ஆண்டுகளில் காயானா செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நான். இந்த பயணத்தின்போது, பகிரப்பட்ட பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட நமது தனித்துவமான உறவுக்கு சிறந்த திசையை வழங்குவது பற்றிய கருத்துக்களை கயானா அதிபரும் நானும் பரிமாறிக்கொள்வோம்.
இந்த பயணத்தின்போது, 185 ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்த இந்தியர் ஒருவருக்கு நான் எனது மரியாதையை செலுத்துவேன். மேலும் சக ஜனநாயக நாட்டின் பிரதிநிதியாக நான் அவர்களின் நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளேன்.
இந்த பயணத்தின் போது, 2வது இந்தியா-CARICOM உச்சிமாநாட்டில் கரீபியன் நட்பு நாடுகளின் தலைவர்களுடன் நானும் இணைவேன். வரலாற்று உறவுகளை புதுப்பிக்கவும், புதிய களங்களில் நமது ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இந்த உச்சிமாநாடு உதவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.