விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் கடந்த 2023-ம் ஆண்டு, அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சி.வி.சண்முகம், “உங்களது பணம் மற்றும் தாலியை அறுத்து, உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை அடமானம் வைத்து, டாஸ்மாக்கில் மது குடித்து, அதன் மூலம் மட்டும் ரூ.50,000 கோடி இந்த ஸ்டாலினுக்கு கிடைக்கிறது” என்று முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
அதையடுத்து முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக சி.வி.சண்முகம் பேசியதாக, அவர் மீது அரசு தரப்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் சி.வி.சண்முகம்.
அந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, “ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்கட்சிகளின் ஜனநாயக கடமைகளில் ஒன்றுதான். அதற்காக கண்ணியம் இல்லாமல் பேசக்கூடாது. பொதுக் கூட்டங்களில் பேசும்போது எச்சரிக்கையுடனும், கண்ணியத்துடனும் பேச வேண்டும். தேர்தல் நேரங்களில் வாக்குறுதிகள் கொடுப்பது உலக அளவில் இருக்கும் நடைமுறைதான்.
அதை நிறைவேற்றாத போது, எதிர்கட்சிகள் அதுகுறித்து விமர்சிக்கலாம். அதற்காக தாலி அறுப்பு என்று பேசுவதையெல்லாம் ஏற்க முடியாது. இத்தனைக்கும் சி.வி.சண்முகம் சாதாரண நபர் அல்ல. சட்டம் படித்தவர், சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். இப்படியெல்லாம் அவர் பேசக் கூடாது. பொறுப்புடன் பேச வேண்டும்” என்று குட்டு வைத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…