நாகர்கோவில்: கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையில் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, கடந்த 2000-ம் ஆண்டு கன்னியாகுமரி கடலில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா குறித்த வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் இருப்பின் மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; கன்னியாகுமரியில் வான்புகழ் கொண்ட அய்யன் திருவள்ளுவருக்கு வானளாவிய சிலை மறைந்த முதல்வர் கருணாநிதியால் 2000ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி திறக்கப்பட்டது. திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு வெள்ளி விழா வருகிற டிசம்பர் 31, ஜனவரி 1, ஆகிய இரு தினங்களில் கொண்டாடப்படவுள்ளது.
அதன் அடிப்படையில் அய்யன் திருவள்ளுவரின் வெள்ளி விழா ஆண்டினை சிறப்பாக நடத்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருணாநிதியால், 1990-ம் ஆண்டு திருவள்ளுவர் சிலை நிறுவும் பணி துவங்கபட்டது. 10 வருட காலம் பல்வேறு இடர்பாடுகளை தாண்டி 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி வெகு விமரிசையாக திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.
1990 முதல் 1999-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் பொதுமக்கள், ஒளிப்பதிவளார்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களால் எடுக்கப்பட்ட அனைத்து தரவுகளையும் குறிப்பாக வீடியோ காட்சி தரவுகள், புகைப்படங்கள் இருப்பின் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் 9498042430 என்ற அலைபேசி எண், [email protected] என்ற மின்னஞ்சல் மற்றும் 9488725580 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தரவுகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்வதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.