தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய இளம் படை, நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 1 எனக் கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இந்த வெற்றியானது, எப்போதும் போல ஒரு வெற்றி என்பதைக் கடந்து, எந்த அணியையும் எதிர்கொள்ள அடுத்த தலைமுறை இளம் அணித் தயாராக இருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறது. குறிப்பாக, டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகிய மூன்று சீனியர் வீரர்களும் ஒய்வை அறிவித்தபிறகு அணியில் ஏற்பட்ட வெற்றிடங்களை, நிரப்பிக் காட்டியிருக்கிறது இந்த இளம்படை.
IND v SA டி20 தொடர் ஹைலைட்ஸ்!
கோலியின் டி20 ஓய்வுக்குப் பிறகு, டி20 அணியில் அவரின் ஒன் டவுன் இடத்தை யார் நிரப்புவார் என்ற கேள்விக்கு விடையாகத் தனது பேட்டிங்கால் தன்னை நிரூபித்திருக்கிறார் திலக் வர்மா. இந்தத் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் இரண்டாவது விக்கெட்டு இறங்கிய திலக் வர்மா, மோசம் என்று சொல்ல முடியாத அளவுக்கு 33, 20 ஆகிய ரன்களை அடித்தார்.
ஆனால், முதல் போட்டி சஞ்சுவின் மேட்ச்சாக அமைந்ததாலும், இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் அனைவருமே சொதப்பியதாலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை எப்படியாவது வெளிக்காட்ட வேண்டும் என்று விரும்பினார் திலக் வர்மா. நேராக கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் சென்றவர், `நான் ஒன் டவுன் இறங்குகிறேன். நன்றாக விளையாடிக் காட்டுவேன்’ என்று தயங்காமல் கேட்டுவிட்டார். அவரின் பேச்சில் இருந்த உறுதியின்மீது நம்பிக்கை வைத்த சூர்யகுமார் யாதவ், தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுத்தார்.
மோசமான பேட்டிங், சிறப்பான பவுலிங் என இரண்டாவது போட்டியில் விளையாடிய இந்திய அணி, வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் மூன்றாம் போட்டியில் இறங்கியது. சஞ்சு மீண்டும் டக் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றமளித்தார். அதையடுத்து, முதல் இரண்டு போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சொதப்பியதால், அடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த அபிஷேக் ஷர்மாவுடன் ஒன் டவுனில் கைகோர்த்தார் திலக் வர்மா. ஒருபக்கம் அபிஷேக் ஷர்மா அரைசதம் அடிக்க, மறுபக்கம் திலக் வர்மா சதமடித்து, கேப்டன் தன்மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றினார்.
இந்திய அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து, 220 என்ற இலக்கை நோக்கி இறங்கிய தென்னாப்பிரிக்க அணி அர்ஷ்தீப் மற்றும் வருண் சக்ரவர்த்தியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் 208 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றியைத் தவறவிட்டது. அதைத்தொடர்ந்து, கடைசிப் போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும், தொடரைச் சமன் செய்ய கடைசிப் போட்டியை வென்றே ஆகவேண்டும் என்ற தீவிரத்தில் தென்னாப்பிரிக்காவும் தயாராகின.
இந்தப் போட்டியிலும் தன்னுடைய இடத்தை திலக் வர்மாவுக்கு விட்டுக்கொடுத்தார் கேப்டன். அபிஷேக் சர்மா 18 பந்துகளில் 36 ரன்கள் அடித்து குட்டி கேமியோவுடன் அவுட்டாகி வெளியேற, சஞ்சுவும் (109) திலக் வர்மாவும் (120) சதமடித்து முதல் இன்னிங்ஸிலேயே இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்துவிட்டனர். வெற்றிபெற 284 ரன்கள் அடிக்க வேண்டுமா என்ற மலைப்பே தென்னாப்பிரிக்காவுக்குத் தோல்வியை உறுதிசெய்துவிட்டது.
கடைசி இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதுவென்ற திலக் வர்மா, இந்தத் தொடரில் மொத்தமாக 280 ரன்கள் அடித்ததன் மூலம் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். எந்த இடத்தில் இறங்கினால் தன்னால் அணிக்கு வெற்றியைத் தேடித் தர முடியும், அணிக்கும் அந்த நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்பதில் தெளிவாக இருக்கும் திலக் வர்மா, கோலி விட்டுச் சென்ற ஒன் டவுன் இடத்தை தன்னால் நிரப்ப முடியும் என்று இந்தத் தொடரில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் இந்திய அணி நிர்வாகத்தை நோக்கி பலரும் எழுப்பும் ஒரே கேள்வி, சஞ்சு சாம்சனை எப்போது இந்திய அணியில் விளையாட வைக்கப்போகிறீர்கள். இந்திய அணியில் அவருக்கு இதற்கு முன் அளிக்கப்பட்ட வாய்ப்புகளில் அவர் வெளிப்படுத்திய ஆட்டத்துக்குள்ளேயே, இந்திய அணி ஏன் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற பதிலும் இருக்கிறது.
ஆனால், சஞ்சு முன்பை விடத் தற்போது தனது ஆட்டத் திறனைக் கொஞ்சம் மேம்படுத்தியிருக்கிறார் என்பதில் சந்தேகமேயில்லை. அதை நிரூபிக்கும் வகையில்தான், வங்காளதேசத்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசிப் போட்டியில், 40 பந்துகளில் சதமடித்திருந்தார். இந்த ஆட்டத்தில்தான், டி20-யில் தனது அதிகபட்ச ஸ்கோர் 297-ஐ இந்திய அணி பதிவுசெய்தது. இதன் மூலம், டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாடுகளில், டி20-யில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் முதலிடம் பிடித்தது இந்தியா.
இத்தகைய சாதனையுடன் தென்னாப்பிரிக்காவுக்கு வந்த இந்திய அணிக்கு, முதல் போட்டியிலேயே மீண்டும் ஒரு சதமடித்து வெற்றியைப் பரிசாகக் கொடுத்தார். இதன்மூலம், டி20-யில் இரண்டு சதங்கள் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், அடுத்தடுத்து இரண்டு டி20 சதங்கள் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்தார் சஞ்சு. ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய அதேவேளையில், அதற்கடுத்த இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆக்கி பெரும் ஏமாற்றத்தை அளித்தார்.
இவர் இப்படித்தான் ஆடிக்கொருமுறை அமாவாசைக்கொருமுறை அடிப்பார் என்று ரசிகர்கள் மீண்டும் முழுமையாகத் திட்டித் தீர்ப்பதற்குள், கடைசிப் போட்டியில் மீண்டும் சதமடித்து வாயடைத்தார். கடைசி ஐந்து டி20 இன்னிங்ஸில் மூன்று சதம் அடிப்பது எளிதான காரியமல்ல. அதை சஞ்சு எளிதாக்கியிருக்கிறார். ஆனால், அடித்தால் சதம் இல்லையென்றால் டக் என்று அவர் ஆடியிருப்பது இந்திய அணியில் அவருக்கான இடத்தை எப்படி நிரந்தரமாக்கும் என்பது கேள்விக்குள்ளாக்குகிறது.
காரணம், பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு சென்றிருக்கும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான் சஞ்சுவுக்கு போட்டியாளர்கள். இவர்கள் அணிக்குத் திரும்புகையில், சஞ்சு சாம்சனுக்கு டி20 அணியில் இடம் கிடைக்குமா, அப்படியே இடம் கிடைத்தாலும் அவர் சதமடித்த ஓப்பனிங் ஸ்லாட் அவருக்குக் கிடைக்குமா என்பது இதுவரை விடையில்லா பதிலாக இருக்கிறது. அதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
2021-ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான வருண் சக்ரவர்த்தி, தனது முதல் போட்டியில் 4 ஓவர்களுக்கு 7 எக்கனாமியில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 ஒரு விக்கெட் வீழ்த்தினார். பின்னர் அதே தொடரில் மற்றொரு போட்டியில் ஒரு விக்கெட் எடுத்த வருண், அதே ஆண்டில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஸ்கட்லாந்து ஆகிய அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடி விக்கெட் எடுக்க முடியாமல் திணறினார். அதன்பின்னர், உடற்தகுதி, காயம் உள்ளிட்ட உள்ளிட்ட காரணிகளால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்தார்.
ஒருவழியாக, இந்தாண்டு ஐ.பி.எல்லில் கொல்கத்தா அணி பட்டம் வென்றதில் முக்கிய பங்காற்றிய வருண், கடந்த அக்டோபரில் வங்காளதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடித்தார். இந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் விளையாடிய வருண், 6 எக்கனாமியில் பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே எனெர்ஜியோடு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் இடம்பிடித்து நன்கு போட்டிகளிலும் களமிறங்கி 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதில், முக்கியமாகத் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் மொத்த பேட்டிங் ஆர்டரும் கொல்லப்ஸ் ஆகி 124 ரன்களை மட்டுமே அடித்த போது, எதிரணிக்கு 125 என்ற எளிய இலக்கையும் தனியாளாக 19 ஓவர் வரை கொண்டுசென்றார் வருண். இந்தப் போட்டியில், நான்கு ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் கரியரில் முதல் ஆறு போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திய வருண், தற்போது கடைசி ஏழு போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, `யார்ரா அந்தப் பையன்… நான் தான் அந்த பையன்’ என்று காம்பேக் கொடுத்திருக்கிறார்.
2022-ல் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே மெய்டன் ஓவர் வீசி ஒரு விக்கெட் எடுத்து கவனம் ஈர்த்த வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், தொடர்ச்சியாகத் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிவிட்டார். நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் 27 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாகவும் அமைந்தார்.
இந்தத் தொடருக்கு முன்பு வரை 54 போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அர்ஷ்தீப், இந்தத் தொடரில் மொத்தமாக 8 விக்கெட்டுகள் வீழ்த்தி, டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் 95 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார். இவருக்கு முன் 96 விக்கெட்டுகளுடன் சஹாலும், இவருக்குப் பின் 90 விக்கெட்டுகளுடன் புவனேஷ்வர் குமாரும் இருக்கின்றனர். 89 விக்கெட்டுகளுடன் நான்காம் இடத்தில இருக்கிறார்.
இதில், சஹால், புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் டி20 இந்திய அணியில்அணியில் விளையாடி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே, அணியில் தொடர்ச்சியாக இடம்பிடித்துச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் அர்ஷ்தீப்புக்கு, சர்வதேச டி20-யில் முதல்முறையாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனை படைக்கும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இஃர்பான் பதான், ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ராவுக்குப் பிறகு இந்திய அணியில் நீண்ட நாள்களாகக் காலியாக இருந்த இடக்கை வேகப்பந்துவீச்சாளர் இடத்தை தனது பந்துவீச்சால் நிரப்பிக்கொண்டிருக்கிறார் அர்ஷ்தீப். பும்ராவுக்குப் பிறகு இந்திய அணியின் பந்துவீச்சை வழிநடத்துபவராக இவர் பார்க்கப்படுகிறார்.
இவர்கள் மட்டுமல்லாது, ரின்கு சிங், ரியான் பராக், ஹர்ஷித் ராணா என ஒரு இளம் படையே வெற்றி வேட்கைக்குக் காத்திருக்கிறது!