இம்பால்: மணிப்பூரில் காணாமல் போனவர்கள் என்று அறிவிக்கப்பட்ட 6 நபர்களில் 3 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து சம்பந்தப்பட்ட 5 மாவட்டங்களில் பதற்றம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மைதேயி மற்றும் குக்கி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது பெரும் வன்முறையாக மாறி, இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை மாநில அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து, இரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மணிப்பூரில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. அண்மையில், ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயதான பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறையாளர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, ஜிரிபாம் பகுதியில் குகி இனத்தைச் சேர்ந்தவர்கள், அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகளை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஜிரிபாம் மாவட்டத்தில் அண்மையில் பாதுகாப்புப் படையினர் – குக்கி ஆயுதக் குழுவினர் இடையே நடந்த மோதலில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்குள்ள துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப் படையினரின் முகாம் மீது குக்கி ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, மைதேயி மக்கள் இருந்த முகாம்களில் இருந்து 6 பேர் மாயமாயினர். இந்நிலையில், ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ராவில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் வெள்ளிக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். ஆனால், இந்த மூன்று உடல்களும் காணாமல் போன 6 பேரின் உடல்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்காக காத்திருப்பதாகவும், அடையாளத்துக்காக புகைப்படங்களை சேகரித்து உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட செய்தி பரவியதால் சம்பந்தப்பட்ட 5 மாவட்டங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பகுதியில் கூடுதல் போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் இணையதள வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்பாலில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் மார்க்கெட்டுக்கு செல்லும் சாலைகளை மறித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.