அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமமூர்த்தி நாயுடு காலமானார். அவருக்கு வயது 72.
ராமமூர்த்தி நாயுடு மாரடைப்பு காரணமாக மூன்று நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (நவ.16) மதியம் அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமமூர்த்தி நாயுடு 1994 சட்டப்பேரவை தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெற்றி பெற்றார். இவர் தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நர ரோஹித்தின் தந்தை ஆவார். தொடர்ந்து பல ஆண்டுகாலம் தெலுங்கு தேசம் கட்சிக்காக பணியாற்றி வந்தார்.
தனது சகோதரரின் புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு, “எனது சகோதரரும், சந்திரகிரி முன்னாள் எம்எல்ஏவுமான நர ராமமூர்த்தி நாயுடு நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்பதை கனத்த இதயத்துடன் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். ராம மூர்த்தி நாயுடு பொது வாழ்வில் தூய உள்ளத்துடன் மக்களுக்கு சேவை செய்தவர். அவரது மறைவு எங்கள் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். ராமமூர்த்தி மறைவுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.