புதுடெல்லி: நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்டார்.
முதல்கட்டமாக அவர் நைஜீரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அந்த நாட்டு தலைநகர் அபுஜாவில் நேற்று இரவு பிரதமர் மோடி தரையிறங்கினார். நைஜீரியா அதிபர் அகமது டினுபுவை அவர் இன்று சந்திக்கிறார். எரிசக்தி, சுரங்கம், மருந்து உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக அவர்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
நைஜீரியாவில் இருந்து பிரதமர் மோடி நாளை பிரேசில் செல்கிறார். அங்கு ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். அப்போது பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார். வரும் 19-ம் தேதி கயானா நாட்டுக்கு செல்கிறார். அங்கிருந்து 21-ம் தேதி டெல்லி திரும்புகிறார். வெளிநாட்டு பயணம் குறித்து பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நைஜீரியாவுக்கு முதல்முறையாக பயணம் மேற்கொள்கிறேன். நைஜீரியா அதிபர் மற்றும் அந்த நாட்டில் வாழும் இந்திய சமூகத்தினரை சந்திக்க ஆர்வமாக உள்ளேன். பிரேசிலில் நடைபெறும் 19-வது ஜி-20 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற இந்தியாவின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அர்த்தமுள்ள விவாதங்களை எதிர்பார்க்கிறேன்.
இதன்பிறகு கயானாவுக்கு செல்கிறேன். கடந்த 50 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் கயானாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமையும். இந்த பயணத்தின்போது, இந்தியா- கரீபியன் சமுதாய உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.