சென்னை: சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட மின் தடையால் நோயாளிகள் பாதிக்கப் பட்டனர்.
சென்னை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 300 முதல் 500 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் மின்சாரம் எடுத்துச்செல்லும் கேபிள்களில் நேற்று இரவு 8.30 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தமிழக சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாகு அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இரண்டு ஜெனரேட்டர்கள் மூலமாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வென்டிலேட்டர் மூலமாக சிகிச்சை பெறும் 15 நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேபிள்கள் பிரச்சினை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் பயப்படும்படியாக எதுவும் இல்லை. மின்கசிவு காரணமாக, தீவிபத்து ஏற்பட்டு மின் விநியோகம் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.
எல்லா வார்டுக்கும் சென்று பார்வையிட்டோம். ஒரு மணி நேரத்தில் மின்தடை சரியாகிவிடும். தீவிர சிகிக்சை பிரிவில் மின் விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, 2 மணி நேரத்துக்கு பிறகு, மின்விநியோகம் சீரானது.