தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் 50% தமிழகத்துக்கே ஒதுக்க நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: “மத்திய அரசின் வரிவருவாயில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 50% ஆக அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எவ்வளவு வரி வருவாய் வசூலிக்கப்படுகிறதோ, அதில் 50 விழுக்காட்டை அந்த மாநிலத்திற்கு வழங்கும் வகையில் நிதிப்பகிர்வுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மாநிலங்களில் இருந்து கிடைக்கும் மத்திய அரசின் வரிவருவாயை மத்திய – மாநில அரசுகள் எந்த விகிதத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் விவாதிப்பதற்காக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-ஆம் நிதி ஆணையத்தின் குழு 4 நாள் பயணமாக சென்னைக்கு வந்திருக்கிறது. தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோருடன் நாளை இந்தக் குழு நடத்தவிருக்கும் கலந்தாய்வுகள் பயனளிக்க வேண்டும்; அதற்கான பங்களிப்பை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பம் ஆகும்.

நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே மத்திய அரசின் வரிப் பகிர்வில் தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன என்பது தான் எவரும் மறுக்க முடியாத உண்மை ஆகும். இந்த நிலை என்றாவது ஒரு நாள் மாற வேண்டும். ஆனால், 15 நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு, 73 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி போக்கப்படவில்லை.

இந்தியா போன்ற நாடுகளில் வளர்ச்சியடையாத மாநில மாநிலங்களுக்கு வளர்ச்சியடைந்த மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரி வருவாயைக் கொண்டு தான் நிதி வழங்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், வரிப்பகிர்வுக் கொள்கை வளர்ச்சியடைந்த மாநிலங்களை சுரண்டுவதற்காக பயன்படுத்தப்படக்கூடாது. மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்களிப்பு என்பது கிட்டத்தட்ட 10 விழுக்காடு ஆகும். ஆனால், மத்திய அரசின் வரி வருவாயில் 41% மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் தமிழ்நாட்டிற்கு வெறும் 4.079% மட்டும் தான் கிடைக்கிறது.

ஒன்பதாம் நிதி ஆணையத்தின் காலத்தில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வரி வருவாயில் 7.931% தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்திற்கான ஒதுக்கீடு கிட்டத்தட்ட பாதியாக குறைந்து விட்டது. இது மிகப்பெரிய பொருளாதார அநீதி ஆகும். இந்த அநீதியை களையும்படி 16-ஆம் நிதி ஆணையக் குழுவிடம் தமிழக அரசு உரிய காரணங்களுடன் விளக்க வேண்டும்.

மத்திய அரசின் வரிவருவாயில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 50% ஆக அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எவ்வளவு வரி வருவாய் வசூலிக்கப்படுகிறதோ, அதில் 50 விழுக்காட்டை அந்த மாநிலத்திற்கு வழங்கும் வகையில் நிதிப்பகிர்வுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். அதேபோல், செஸ் மற்றும் கூடுதல் தீர்வைகளை வசூலிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். அது தவிர்க்க முடியாதது என்று மத்திய அரசும், நிதி ஆணையமும் கருதினால் அதன் மூலம் கிடைக்கும் வருவாயும் பகிர்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். நிதி ஆணையக் குழுவிடம் இதை தமிழக அரசு உறுதியாக வலியுறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.