புதுடெல்லி: இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை டெல்லி எதிர்கொள்ளவுள்ள சூழலில் ஆளும் ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி தரும் வகையில் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கைலாஷ் கெலாட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கைலாஷ் கெலாட் உள்துறை, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், மகளிர், குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளை தன்வசம் வைத்திருந்தார். ஆம் ஆத்மி கட்சியில் நீண்ட காலமாக இருந்த அவரின் இந்த முடிவு அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது.
கைலாஷ் கெலாட் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எழுதிய தனது ராஜினாமா கடிதத்தில், “ஆம் ஆத்மி மிக மோசமான உட்கட்சி சவால்களை எதிர்கொண்டுள்ளது. கட்சியின் மக்கள் நலன் கொள்கையை அரசியல் இலக்குகள் வென்றுவிட்டன. இதனால் கட்சி முன்வைத்த பல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. யமுனை ஆற்றை தூய்மைப் படுத்துவேன் என்ற ஆம் ஆத்மியின் வாக்குறுதி அதற்கு ஒரு சாட்சி. இப்போது யமுனை ஆறு முன்பைவிட மிக மோசமாக மாசமடைந்துள்ளது.
இதேபோல் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு விஷயங்கள் உள்ளன. கேஜ்ரிவாலின் பங்களா சர்ச்சை உள்பட பல்வேறு சர்ச்சைகள் மக்கள் மத்தியில் ‘இனியும் ஆம் ஆத்மியை நம்பலாமா?’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி இப்போதெல்லாம் தனது அரசியல் கொள்கைக்காக சண்டையிடுவதிலேயே ஆர்வம் காட்டுகிறது. இதனால் மக்களுக்கு அடிப்படை சேவைகளைக் கூட செய்ய முடியாமல் போகிறது. பெரும்பாலான நேரத்தை மத்திய அரசுடன் போட்டிப் போட்டுக் கொண்டே இருப்பதில் ஆம் ஆத்மி செலவழித்துக் கொண்டிருந்தால் டெல்லி உண்மையான வளர்ச்சியை எட்ட முடியாது என்பதே உண்மை.
நான் எனது அரசியல் பயணத்தை மக்கள் சேவை என்ற இலக்கோடு தொடங்கினேன். அதையே தொடர விரும்புகிறேன். அதனால் இப்போது ஆம் ஆத்மியில் இருந்து துண்டித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளேன். அதனால் ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். உங்கள் உடல் நலம் சிறக்க, எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவில் இணைகிறாரா? இதற்கிடையில் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்தேகங்களுக்கு தூபம் போடுவதுபோல் கெலாட் ராஜினாமா அறிவித்த சில நிமிடங்களில் டெல்லி மாநில பாஜக தலைவர் சேஷாத் பூனாவல்லா, “ஆம் ஆத்மி கட்சி இப்போது அரவிந்த் ஆத்மி கட்சியாகிவிட்டது. அந்தக் கட்சியின் நிலையை அதில் முக்கியத் தலைவராக இருந்த கெலாட் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளார்.” என எதிர்வினையாற்றியுள்ளார்.