இந்த 3 வீரர்களை எப்படியாது ஏலத்தில் எடுக்க வேண்டும்! மும்பை அணியின் மெகா பிளான்!

ஐபிஎல் மெகா ஏலம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஐபிஎல் 2025 மெகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கான வேலைகளை பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் தீவிரமாக பார்த்து வருகிறது. ஒவ்வொரு அணிகளும் ஏலத்தில் தங்களுக்கு வேண்டிய வீரர்களை எடுப்பதற்கு வியூகங்களை அமைத்து வருகின்றனர். ஐபிஎல்லில்  ஐந்து முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள மும்பை அணி கடந்த சில சீசன்களாக மிகவும் மோசமாக விளையாடி வந்தது. இந்நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை அணி ரோகித் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியவரை தக்க வைத்துள்ளது. 

கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர்வார் என்றும் மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர்களை தாண்டி சிலர் வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் டார்கெட் செய்ய உள்ளனர். மும்பை அணியின் வெற்றிக்கும் எப்போதுமே பொல்லார்ட் போன்ற சில வெளிநாட்டு வீரர்கள் அதிகம் உதவிகரமாக இருந்துள்ளனர். எனவே அவரை போல சில ஆல் ரவுண்டர்களை ஏலத்தில் குறி வைத்துள்ளனர். இதுவரை 75 கோடியை வீரர்கள் தக்க வைப்பிற்கு மும்பை பயன்படுத்தி உள்ளது. மீதமுள்ள 45 கோடியில் ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை அணி யார் யாரை டார்கெட் செய்ய உள்ளனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஜோஸ் பட்லர்

மும்பை அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷனை அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை. கடந்த ஏலத்தில் அவரை 15.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர். ஆனால் இந்த முறை அவ்வளவு தொகை இல்லாததால் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை அணியில் எடுக்க திட்டம் வைத்துள்ளனர். ​​ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் போன்ற இந்திய வீரர்கள் இருந்தாலும் மும்பை அணியால் அவர்களை ஏலத்தில் எடுக்க முடியாது. எனவே ஜோஸ் பட்லர் போன்ற ஒரு வீரரை குறைந்த தொகையில் ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளனர். கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய பட்லரை அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை. 

பில் சால்ட்

மும்பை இந்தியன்ஸ் குறிவைக்கக்கூடிய மற்றொரு இங்கிலாந்து வீரர் ஃபில் சால்ட். ஐபிஎல் 2024ல் சால்ட் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடி இருந்தார். கேகேஆர் அணி கோப்பையை வெல்ல இவரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். தனது ஆக்ரோஷமான பேட்டிங் மூலம் 2024 ஐபிஎல் போட்டியில், 12 இன்னிங்ஸ்களில் 4 அரைசதங்கள் உட்பட 182 ஸ்ட்ரைக் ரேட்டில்  435 ரன்கள் குவித்துள்ளார். மும்பை அணியை தாண்டி இவரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் போட்டி போட்டு வருகின்றன. 

மார்கஸ் ஸ்டோனிஸ்

பொல்லார்ட் போன்ற ஒரு ஆல்ரவுண்டர் வீரரை மும்பை அணி தேடி வருகிறது. இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணியில் இருந்தாலும் ஒரு வெளிநாட்டு வீரரை மும்பை அணி தேடி வருகிறது. அந்த இடத்தில் மார்கஸ் ஸ்டோனிஸ் சரியாக இருப்பார் என்று மும்பை கருதுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த மார்கஸ் ஸ்டோனிஸ் கடந்த சீசனில் லக்னோ அணிக்காக விளையாடி வந்தார். மற்றொரு ஆஸ்திரேலியா வீரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் மீதும் மும்பை அணி ஒரு கண் வைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.