புதுடெல்லி: ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, ’உண்மை வெளியே வருகிறது’ எனப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’. இந்தப் படம் நவம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் விக்ராந்த் மாஸ்ஸி நாயகனாக நடித்துள்ளார். உடன் ராஷி கண்ணா, ரித்தி டோக்ரா நடித்துள்ளனர். படத்தை தீரஜ் சர்மா இயக்கியுள்ளார். சோபா கபூர், ஏக்தா ஆர் கபூர், அமுல் வி மோகன், அன்சூல் மோகன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, “நன்றாகச் சொன்னீர்கள். உண்மை வெளிவருவது நல்லது. அதுவும் சாமான்ய மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உண்மை வெளிப்படுவது நல்லது. போலியான வர்ணனைகள் குறிப்பிட்ட சில காலம் தான் உயிர்ப்புடன் இருக்க முடியும். உண்மை நிச்சயம் வெளியே வந்தே தீரும்” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை வெளியான படத்தில் டீஸரை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அதி பிரதமர் மோடியை பயனர் ஒருவர் டேக் செய்திருந்த நிலையில், அவருக்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி இந்த ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுப்பட்டுள்ள விக்ராந்த் அளித்த பேட்டியில், “மோசமாக இருக்கும் என கருதும் விஷயங்கள் உண்மையில் மோசமாக இருப்பதில்லை. எனது கண்ணோட்டம் தொடர்ந்து பரிணாமம் அடைந்து வருகிறது. முஸ்லிம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்; இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் யாரும் ஆபத்தில் இல்லை. எல்லாமே இங்கு சரியாக தான் இருக்கிறது. உலகில் நிம்மதியாக வாழ சிறந்த நாடு இந்தியா தான்.” எனப் பேசியிருந்தது கவனம் பெற்றது.