IPL 2025 Mega Auction Latest News Updates: ஐபிஎல் 2025 மெகா ஏலம் வரும் நவ. 24 மற்றும் நவ. 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியா தலைநகர் ஜெட்டாவில் நடைபெற இருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களால் பெரியளவில் இந்த மெகா ஏலம் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகமது ஷமி, யுஸ்வேந்திர சஹால் போன்ற முக்கிய இந்திய வீரர்கள் தொடங்கி ஜாஸ் பட்லர், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், ககிசோ ரபாடா, மிட்செல் ஸ்டார்க் போன்ற முக்கிய வெளிநாட்டு வீரர்களும் ஏலம் விடப்பட உள்ளனர். இவர்கள் நிச்சயம் பெரிய தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளது.
அதிலும் குறிப்பாக, பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தங்களுக்கு தேவையான நட்சத்திர வீரர்கள் பல கோடிகள் கொடுத்து அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பண்டை பஞ்சாப், கேஎல் ராகுலை பெங்களூரு, ஷ்ரேயாஸ் ஐயரை டெல்லி உள்ளிட்ட அணிகள் இப்போதே குறிவைத்திருக்கும் என கூறப்படுகிறது.
சிஎஸ்கே டிக் அடித்திருக்கும் 3 இளம் வீரர்கள்
இந்த அணிகள் ஒரு பக்கம் இருக்க சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் இந்த முக்கிய வீரர்களை எடுக்க பெரிதாக ஆர்வம் காட்டாது எனலாம். அதே நேரத்தில் இந்த அணிகள் உள்ளூரில் சிறப்பாக செயல்பட்டிருக்கும் வீரர்களை தூக்க அதிகம் ஆர்வம் காட்டும். மும்பை இந்தியன்ஸ் அணியை (Mumbai Indians) சொல்லவே தேவையில்லை. இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா தொடங்கி இப்போது திலக் வர்மா வரை பல திறமையான வீரர்களை அடையாளம் காட்டியுள்ளது. தற்போது நேஹல் வதேரா, நமன் திர், அன்சுல் கம்போஜ் உள்ளிட்ட திறமையான இளம் வீரர்களை வளைத்துப் போட 1 Uncapped RTM உடன் காத்திருக்கிறது எனலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோ (Chennai Super Kings) தோனியை Uncapped வீரராக தக்கவைத்துவிட்டது. இனி நிஷாந்த் சிந்து, சமீர் ரிஸ்வி, சிமர்ஜீத் சிங் உள்ளிட்ட வீரர்களை தக்கவைப்பது முடியாது, ஏலத்தில் எடுப்பதும் அவ்வளவு சாதாரணமில்லை எனலாம். அதே நேரத்தில் விக்கெட் கீப்பருக்கு ஒரு பேக்-அப், மிடில் ஆர்டர், வேகப்பந்துவீச்சு ஆகிய பிரிவில் காணும் வெற்றிடங்களை நிரப்ப குறைந்த தொகையில் சில Uncapped திறமைகளை அள்ளிப்போட வேண்டிய கட்டாயம் சிஎஸ்கேவுக்கு உள்ளது. அந்த வகையில், திறமையான இந்த மூன்று Uncapped வீரர்களை எடுத்து தங்களின் பிளேயிங் லெவனில் விளையாட வைக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1. ஆயுஷ் மாத்ரே
‘ஆம், சென்னை அணியில் இருந்து அழைப்பு வந்தது உண்மைதான்’ என ஆயுஷ் மாத்ரே (Ayush Mhatre) சமீபத்தில் கூறியிருந்தார். 17 வயது இளைஞரான இவர் தற்போது மும்பை அணி சார்பில் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி வருகிறார். ஓப்பனிங்கில் இறங்கும் இவர் 9 இன்னிங்ஸ்களில் 303 ரன்களை 37.9 சராசரியில் அடித்துள்ளார்.
ரஹானே, ஷர்துல் தாக்கூர், தூபே, துஷார் தேஷ்பாண்டே என மினி மும்பை ரஞ்சி அணி சிஎஸ்கேவில் இருந்த நிலையில், அதே வரிசையில் ஆயுஷ் மாத்ரேவையும் சிஎஸ்கே சேர்க்க திட்டமிட்டிருக்கிறது. இவர் ஓப்பனிங்கில் விளையாடினால் ருதுராஜ் மூன்றாவது வீரராக களமிறங்க வாய்ப்பிருக்கிறது. இல்லையெனில் கான்வே-ருதுராஜ் ஜோடி அமைந்தால் மாத்ரே 3ஆவது வீரராக களமிறங்கலாம். சிஎஸ்கேவில் வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி போன்ற வீரர்கள் கிடைத்துவிட்டால் இவர் பேக்-அப் பேட்டராக இருப்பார்.
2. ராபின் மின்ஸ்
தோனிக்கு பேக்-அப் தேவை. சிஎஸ்கே இந்த இடத்தில் கடந்த சீசனில் ஆரவல்லி அவினாஷ் என்பவரை எடுத்தது. தற்போது இந்த இடத்தில் ராபின் மின்ஸை (Robin Minz) எடுக்க சிஎஸ்கே திட்டமிட்டிருக்கிறது. கடந்த மினி ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி ராபின் மின்ஸை ரூ.3.6 கோடி கொடுத்து எடுத்தது. ஆனால், காயம் காரணமாக கடந்த சீசன் முழுவதையும் அவர் விளையாடவில்லை. ஜார்க்கண்டை சேர்ந்த ராபின் மின்ஸை தோனி குறிவைத்திருப்பதாகவும், 22 வயது இளம் வீரரான ராபின் மிடில் ஆர்டரில் சிஎஸ்கேவுக்கு தூணாக இருப்பார் என்றும் நம்பப்படுகிறது.
இவரையும் குறைந்த தொகையில் தூக்க சிஎஸ்கே திட்டமிடும். தோனி இருப்பதால் இவர் பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு குறைவு என்றாலும் இம்பாக்ட் பிளேயராக கடந்த முறை சமீர் ரிஸ்வியை குஜராத் அணிக்காக இறக்கிவிட்டது போல் இவரையும் ஒரு சில போட்டிக்கு இறக்கிவிடலாம். கடைசி கட்ட ஓவர்களில் அதிரடி காண்பிக்கும் வீரராக அறியப்படுகிறார்.
3. குர்ஜப்னீத் சிங்
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான இடதுகை வேகப்பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங்கை (Gurjapneet Singh) சிஎஸ்கே நிச்சயம் எடுக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது. டிஎன்பிஎல் தொடரில் கலக்கி வந்த இவர், தற்போது தமிழ்நாடு ரஞ்சி டிராபி அணியில் மிரட்டி வருகிறார். இந்த ரஞ்சி சீசனில் அறிமுகமான குர்ஜப்னீத் 7 இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். சராசரி 19.69 ஆக உள்ளது. முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் புஜாராவை டக்அவுட்டாக்கி, அந்த இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
வங்கதேச தொடருக்கு முன் சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொண்ட விராட் கோலிக்கு பந்துவீசிய குர்ஜப்னீத் சிங், அங்கு விராட்டின் விக்கெட்டையும் வீழ்த்தி மிரட்டினார். 6.3 அடி உயரம் கொண்ட இவர் பஞ்சாப்பில் பிறந்து வளர்ந்தாலும், படித்து கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய இடம் தமிழ்நாடுதான். அந்த வகையில், சிஎஸ்கேவில் இருந்து அவர் தனது ஐபிஎல் பயணத்தை தொடங்குவாரா என பலரும் எதிர்பார்க்கின்றனர். சிஎஸ்கே இவரை நிச்சயம் நல்ல தொகையில் எடுத்து ஓப்பனிங்கிலும், பதிரானாவுடன் டெத் ஓவர்களிலும் பந்துவீச முயற்சிக்கும். இவரை போன்ற 16 வயது இளம் வீரரான ஆன்ட்ரே சித்தார்த் (Andre Siddharth) என்ற இளம் வீரரையும் சிஎஸ்கே ஏலத்தில் எடுக்கும்.