புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ஐந்து நாள் வெளிநாட்டு பயணம் இன்று முதல் துவங்கி உள்ளது. இதில், 1965 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுடன் தூதரக உறவில் இருக்கும் கயானாவும் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவும் கயானாவும் நமது கூட்டு நாகரிக தொடர்புகள் மற்றும் மக்களுடன் நெருங்கிய உறவுகள் அடிப்படையில் சுமூக உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. கயானா கடந்த 180 ஆண்டுகளாக புலம்பெயர்ந்த இந்தியர்களின் தாயகமாக இருந்து வருகிறது. கடந்த 1968-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கயானாவுக்குச் சென்றிருந்தார். இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர்களான டாக்டர் ஷங்கர் தயாள் சர்மா. பைரோன் சிங் செகாவத் ஆகியோர் முறையே 1988 மற்றும் 2006-ல் கயானாவிற்கு பயணித்தனர்.
கடைசியாக, பிப்ரவரி 2023-ல் கயானாவின் துணை அதிபர் பாரத் ஜக்தியோ இந்தியாவிற்கு விஜயம் செய்தார். அடுத்து, கயானாவின் பிரதமர் பிரிகேடியர்(ஓய்வு) மார்க் பிலிப்ஸ் பிப்ரவரி 2024-ல் டெல்லியில் TERI ஏற்பாடு செய்த உலக நீடித்த வளர்ச்சி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். கயானாவுடனான இந்தியாவின் மொத்த இருதரப்பு வர்த்தகம் 2023-24-ம் ஆண்டில் 106 மில்லியன் அமெரிக்க டாலராகும். (ஏற்றுமதி – 99 மில்லியன் மற்றும் இறக்குமதி – 7 மில்லியன்), மற்றும் முந்தைய ஆண்டை விட இது 60 சதவிகித வளர்ச்சியை கண்டுள்ளது.
ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களில் மின்சார எந்திரங்கள், மருந்துகள், இயந்திரங்கள் மற்றும் எந்திர உபகரணங்கள் மற்றும் வாகன பாகங்கள் ஆகியவை அடங்கும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் கழிவு இரும்பு மற்றும் ஸ்டீல், பாக்சைட் தாதுக்கள் மற்றும் மரப் பொருட்கள் அடங்கும். இந்தியா-கயானா இருநாட்டு வர்த்தகம் வளர்ச்சியடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
2021-22ல், மொத்த இருதரப்பு வர்த்தகம் அதன் உச்சத்தை எட்டி கச்சா எண்ணெய் இறக்குமதியின் காரணமாக 223 மில்லியனாக இருந்தது. பாதுகாப்பு, விவசாயம், எரிசக்தி, சுகாதாரம் மற்றும் மருந்து, ஆயுர்வேதம் மற்றும் ஆரோக்கியம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மனித வளங்கள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய எட்டு கூட்டுப் பணிக்குழுக்கள் கடந்த ஆண்டு நிறுவப்பட்டன.
இந்தியா-கயானா பாதுகாப்பு உறவுகள் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளன, மேலும் படிப்படியாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ராணுவத்துக்கான லைன் ஆஃப் கிரெடிட் கடந்த 2023-ல் அறிவிக்கப்பட்டது. இரண்டு டோர்னியர்-228 விமானங்கள் ஏப்ரல் 2024-ல் கயானாவிற்கு வழங்கப்பட்டுள்ளன. கடலில் செல்லும் பயணிகள் மற்றும் சரக்கு படகும் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
இந்தியாவும் கயானாவும் எரிசக்தி துறையில் வலுவான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. 2021-22-ஆம் ஆண்டில், இந்தியா முதல் முறையாக 149 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. பயிற்சி மற்றும் திறன் மேம்பாடும் ஒத்துழைப்புக்கான மற்றொரு முக்கியமான விஷயமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐடிஇசி திட்டத்தினால் 100-க்கும் மேற்பட்ட கயானா நாட்டு வல்லுநர்கள் பலனடைகின்றனர்.
சமீபத்தில், கயானா கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாட்டுச் சூழலுக்கு ஏற்ப தழுவி அமைக்கப்பட்ட ஐடிஇசி பாடநெறிகளை இந்தியா அளித்திருக்கிறது. லைன்ஸ் ஆஃப் கிரெடிட்(எல்ஒசி) மூலம் கயானாவுடனான இந்தியாவின் வளர்ச்சிக் கூட்டாளித்துவம் சுகாதாரம், தொடர்பு, மின்சாரம், நீர், கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கியதாக உள்ளது. 2004 முதல், கயானா அரசாங்கத்திற்கு 143.04 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பதினொரு லைன்ஸ் ஆஃப் கிரெடிடட்களை இந்தியா வழங்கியுள்ளது. இந்தியர்கள் முதன் முதலில் மே 5, 1838-ல் கயானாவுக்கு வந்தனர்.
இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களின் வருகையை மே 5 அன்று இந்திய வருகை தினமாக கயானா கொண்டாடுகிறது. கயானாவின் மிகப்பெரிய இனக்குழுவாக உள்ள இந்தோ – கயானீஸ் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 40% உள்ளனர். பக்வா (ஹோலி), தீபாவளி, நவராத்திரி போன்ற இந்திய பண்டிகைகளை முழு ஆர்வத்துடன் கயானிய மக்கள் தொடர்ந்து கொண்டாடுகின்றனர். லதா மங்கேஷ்கர் நடனம் மற்றும் இசை கல்வி உதவித்திட்டம் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் காமன்வெல்த் கல்வி உதவித்திட்டம் உட்பட பல உதவித்தொகைகளை இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில்(ஐசிசிஆர்) வழங்குகிறது.