நாக்பூர்: மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத் திற்காக நாக்பூர் வந்திருந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல் வருகைக்குப் பிறகு மக்களவையில் விவாதங்களின் தரம் குறைந்துவிட்டது. எங்களிடம் பேசுவதற்கும் விவாதம் செய்வதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள், ஆனால் காங்கிரஸுக்கு அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. விவாதிக்க விரும்புவோர் ராகுலுக்கு பயப்படுகின்றனர். காங்கிரஸ் மூத்த எம்.பி.க்கள் பலர் விவாதங்கள் வேண்டும் என்று ராகுலிடம் கூறியுள்ளனர். ஆனால் ராகுல் அதுபற்றி கவலைப்படவில்லை. ஏனென்றால் அவரால் விவாதிக்க முடியாது.
சில தன்னார்வ அமைப்புகள் கொடுக்கும் துண்டு சீட்டுகளை அவர் படிக்கிறார். தலித்துகள், பழங்குடியினர், அரசியல் சாசனம் மற்றும் அம்பேத்கர் பற்றி பேச அவருக்கு உரிமை இல்லை. வக்பு சட்டத் திருத்த மசோதாநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப் படும். இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக அவ்வாறு செய்கிறார்கள். முஸ்லிம் பிரதிநிதிகள் பலர் என்னை சந்தித்து மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் மகாயுதி கட்சிகளுக்கு சாதகமாக சூழல் காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.