பார்டர் – கவாஸ்கர் கோப்பை: இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு எத்தனை சதவீதம்..? – ஹர்பஜன் கணிப்பு

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தொடர் நெருங்கும் வேளையில் பல முன்னாள் வீரர்கள் இந்த தொடரில் வெல்லப்போகும் அணி குறித்தும், வீரர்கள் குறித்தும் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இம்முறை இந்தியா வெல்வதற்கு 50 – 50% மட்டுமே வாய்ப்புள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக நம்முடைய திடமான பேட்ஸ்மேன்கள் கூட எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தடுமாறினார்கள். நம்முடைய சீனியர் வீரர்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி இருக்க வேண்டும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் அது உங்களுடைய பிரச்சினையை தீர்க்காது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் நல்ல சூழ்நிலைகள், ஆடுகளங்கள் இருக்கும்.

இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவில் நன்றாக வருவார்கள் என்று நான் கருதுகிறேன். அதற்கு புஜாரா போல பந்தை பழையதாக்கி விளையாடும் வீரர்கள் நமக்குத் தேவை. கே.எல் ராகுல் அதிகப்படியாக விமர்சிக்கப்பட்டாலும் கிளாஸ் பிளேயர். இந்தத் தொடரில் நமக்கு 50 – 50 வெற்றி வாய்ப்பு இருக்கும். இம்முறை ஆஸ்திரேலியா வெற்றி பெற கொஞ்சம் அதிக வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். ஏனெனில் அவர்கள் சொந்த ஊரில் விளையாடுகிறார்கள்.

மறுபுறம் இந்தியா சொந்த ஊரில் சந்தித்த தோல்வியால் கொஞ்சம் பின்னடைவை சந்தித்து இருப்பார்கள். இந்தியா முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்குவது முக்கியம். ஒருவேளை முதல் போட்டியில் இந்தியா நல்ல தொடக்கத்தை பெறவில்லையெனில் தொடர் முழுவதும் நல்ல சண்டையை கொடுக்க வேண்டும். இல்லையெனில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படலாம்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.