3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திருமாவளவன், ரகுபதி, டி.ராஜா பேசியது என்ன?

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நம்மோடு தான் இருப்பார் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை பேசியதற்கு, “மக்களோடு இருப்போம்” என விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்தார். இத்தகைய கருத்து பரிமாற்றங்களால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தென்னிந்திய வழக்கறிஞர்கள் மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசியவர்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: இந்திய குற்றவியல் சட்ட பெயர்களில் இண்டியா கூட்டணி நினைவுபடுத்தப்படுவதால், தங்களது கட்சிப் பெயரின் முதல் வார்த்தையான பாரதிய என்ற வார்த்தையை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் சட்டத்தின் பெயரை மாற்றியுள்ளனர். இந்தியை மறைமுகமாக திணிக்கும் நோக்கமும் தெரிகிறது. இவற்றில் உள்ள பாதகங்களை கண்டறிய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் அறிக்கையை பெற்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.

மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்: ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட சட்டத்தை மாற்றுவதாகக் கூறி, ஜனநாயகத்துக்கு எதிரான மோசமான சட்டப் பிரிவுகளை நடைமுறைப்படுத்தியுள்ளனர். 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா: அரசியலமைப்புச் சட்டத்தை தகர்க்கும் கொள்கையோடு பாஜக செயல்பட்டு வருகிறது. குற்றவியல் சட்டங்களை தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கிறோம்.

அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை: வழக்கறிஞர்களுக்கு உற்ற துணையாக இருப்பது அதிமுக. தற்போது தமிழகமே திருமா எங்கு செல்வார் என பார்த்துக் கொண்டிருக்கிறது. இங்குதான் இருக்கிறார். எங்களோடுதான் இருக்கிறார். நான் அரசியல் பேச வரவில்லை. வழக்கறிஞர்கள் இருக்கும் இடத்துக்கு வருவார் என்று சொன்னேன். அவர் நம்மோடு தான் இருப்பார். நல்லவர்களோடு தான் இருப்பார். திருமாவளவனுக்கு வேறு நிகழ்ச்சி இருப்பதால் வழிவிடவேண்டும் என்றனர். அவருக்கு வழிவிடவே காத்திருக்கிறோம்.

விசிக தலைவர் திருமாவளவன்: கொண்டு வரப்பட்ட சட்டங்களை திரும்பப் பெற வைத்தவரலாறு நமக்கு இருக்கிறது. அந்த வகையில் வழக்கறிஞர்கள் முன்னெடுக்கும் முயற்சிக்கு விசிக துணையாக இருக்கும். நாங்கள் கட்சிகளாடு அல்ல; மக்களோடு இருப்போம் என்பதே இன்பதுரைக்கு எனது பதில். மக்களுக்காக போராடுவோர் யாராக இருந்தாலும் அவர்களோடு நிற்க பக்குவப்பட வேண்டும்.

தேர்தல் நிலைப்பாடு முற்றிலும் வேறானது. அது வெற்றி, நாட்டு நலன், கட்சி நலன், காலச்சூழல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. முரண்பாடானவர்களுடன் இருக்க நேரும். இது அரசியல் யுத்தி. அதை அனைத்து இடத்திலும் பொருத்தி பார்க்கக் கூடாது. இவ்வாறு பேசினர்.

பின்னர், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் ஹாஜாகனி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்வில், வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் ஆர்.நந்தகுமார், பொதுச்செயலாளர் கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசும்போது, இன்பதுரை விடுத்தது தேர்தலுக்கான அழைப்பு கிடையாது. புதிய குற்றவியல் சட்டங்கள் போராட்டத்துக்கான அழைப்பு. நாங்கள் வேறு கூட்டணிக்குச் செல்லவும், இன்னொரு கூட்டணி உருவாக்க வேண்டிய தேவையும் எழவில்லை என்றார்.

இதேபோல் இன்பதுரை கூறும்போது, நான் பேசியது அரசியல் அச்சாரமாக இருக்கும். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. எனவே, நியாயத்தின் பக்கம் திருமா நிற்பார். கூட்டணி முடிவுகளை தலைமை இறுதி செய்யும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.