இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டர் சேட்டேஷ்வர் புஜாரா 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் வர்ணனையாளராக பங்கேற்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஹிந்தி மொழியில் வர்ணனை குழுவில் புஜாரா இணைவார் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. பெர்த்தில் உள்ள WACA மைதானத்தில் போட்டி நடைபெற உள்ள நிலையில் இரண்டு அணிகளுக்கும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் இடம் பெற இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
CHETESHWAR PUJARA AS COMMENTATOR….!!!!!
– Pujara will be doing commentary for Star Sports Hindi in Border Gavaskar Trophy. pic.twitter.com/qNhybHxNZR
— Johns. (@CricCrazyJohns) November 18, 2024
ஷுப்மான் கில் காயம்
இந்திய அணி மற்றும் இந்திய A அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியின் போது ஷுப்மான் கில் காயம் அடைந்தார். கேட்ச் பிடிக்கும் போது கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முதல் டெஸ்டில் இருந்து கில் நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியும் வெளியானது. இந்நிலையில் அவருக்கு பதில் சேதேஷ்வர் புஜாரா அணியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணங்களிலும் புஜாரா இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருந்தார். அதனால் பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25க்கான இந்திய அணியில் புஜாரா இடம் பெறுவார் என்று கருதப்பட்டது. ஆஸ்திரேலியாவில் 2018/19ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரின் வெற்றிக்கு புஜாரா முக்கிய காரணமாக இருந்தார். அப்போது நடைபெற்ற 4 டெஸ்டில் 74.42 சராசரியாக 521 ரன்கள் அடித்து சிறந்த வீரராக இருந்தார்.
சேட்டேஷ்வர் புஜாராவின் கடைசி டெஸ்ட் தொடர்
2023ம் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் புஜாரா கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு, அவர் எந்த ஒரு போட்டியிலும் இடம்பெறவில்லை. புஜாராவிற்கு பதிலாக ஷுப்மான் கில் 3வது இடத்தில் விளையாடி வருகிறார். அந்த இடத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தும் வருகிறார் கில். பல தொடர்களில் கில் பேட்டிங் அணிக்கு பெரிதும் உதவி உள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக கில் வெளியேறி உள்ளது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்திய மண்ணை தாண்டி வெளிநாட்டு மண்ணில் கில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
கில்லுக்கு பதில் தேவ்தத் படிக்கல்?
சுப்மான் கில் இல்லாத நிலையில், இந்திய அணி தேவ்தத் படிக்கலை அவருக்கு பதில் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா ஏ அணியில் இடம் பெற்று இருந்த படிக்கல் நல்ல பார்மில் இருந்து வருகிறார். எனவே முதல் டெஸ்ட் போட்டியில் 3-வது இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பிசிசிஐ தரப்பில் இருந்து படிக்கல் விளையாடுவது குறித்தும், கில் காயம் குறித்தும் அதிகாரபூர்வ தகவல் இல்லை. மறுபுறம் முதல் டெஸ்டில் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம் பெற மாட்டார். அவருக்கு பதில் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு கேப்டனாக இருப்பார்.