`‘விஸ்வாசம்’ ஒன்று… ‘கொள்கை’ வேறு..!’ – ட்ரம்ப்புக்கு ‘தளபதிகள்’தான் தலைவலியா?

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ள ட்ரம்ப் வரும் ஜனவரி மாதம் பதவியேற்க இருக்கிறார். தனது தேர்தல் பிரசாரத்தில் எல்லைப் பிரச்னை, டீப் ஸ்டேட் விவகாரம், வரி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை கையில் எடுத்து அவற்றை தொடர்ந்து பேசி வந்தார் ட்ரம்ப்.

ட்ரம்ப் 2.0 ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதை தேர்தல் பிரசாரங்களில் அவர் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் நம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். தேர்தலில் ட்ரம்ப்புக்கு மிகப் பெரிய தொழிலதிபர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் வெளிப்படையான ஆதரவை நல்கினர்.

வெளியிலிருந்து பார்த்தால் இவர்கள் ட்ரம்ப் ஆதரவு என்ற குடையின் கீழ ஒற்றுமையாக விசுவாசத்துடன் திரண்டிருப்பதாகவே தோன்றும். ஆனால், சற்றே ஆழமாக ஆராய்ந்தால் அவர்கள் ஒவ்வொருக்குமான நோக்கங்கள், லட்சியங்கள் முரணானவை.

துளசி கப்பார்ட்

உதாரணமாக. இந்தத் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்கு மிகப் பெரும் உறுதுணையாக இருந்தவர்கள் துளசி கப்பார்ட், மேட் கேஸ், ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர். இந்த மூவர் கூட்டணி ட்ரம்ப்புக்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அதிலும் பைடன் அரசின் கொள்கைகளை கடுமையாக எதிர்த்து வந்தனர்.

மேட் கேஸ்

மேட் கேஸ்-ஐ தனது அட்டார்னி ஜெனரல் வேட்பாளராக ட்ரம்ப் தேர்வு செய்திருப்பது மிகவும் சர்ச்சைக்குரிய தேர்வாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காரணம், மேட் கேஸ் மைனர் சிறுமியுடன் பாலுறவில் ஈடுபடுவதற்காக பணம் கொடுத்தது, சட்டவிரோத போதைப் பொருட்களை பயன்படுத்தியது, பிரச்சார நிதியை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட புகார்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இன்றுவரை அவர் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

இன்னொரு புறம் உளவுத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் துளசி கப்பார்ட், ஜனநாயகக் கட்சியில் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்து ட்ரம்பை ஆதரிப்பதற்காகவே கட்சி மாறியவர். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வந்தவர். ரஷ்யாவின் உக்ரைன் தாக்குதலுக்கு நேட்டோவை குற்றம்சாட்டிவர்.

ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர்

சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், நீண்டகால வழக்கறிஞரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். தடுப்பூசிகள் குறித்தும், 5ஜி சிக்னல்கள் குறித்தும் பல ஆதாரமற்ற தகவல்களை தொடர்ந்து பரப்பி வந்தவர்.

உணவு மற்றும் விவசாயத் துறையில் கடுமையாக கட்டுப்பாடுகளை கொண்டு வரவிரும்பும் கென்னடியின் நோக்கம், ட்ரம்ப்பின் டீப் ஸ்டேட் கொள்கையுடன் நேரடியாக மோத வாய்ப்பிருக்கிறது. அதேபோல மேட் கேஸ் மரிஜூவானாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர். இது குடியரசுக் கட்சியின் கொள்கைக்கு முற்றிலும் நேரெதிரானது.

டாம் ஹோமேன், ஸ்டீபன் மில்லர்

எல்லைப் பிரச்னைகளை கையாள ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட டாம் ஹோமேன், ஸ்டீபன் மில்லர், க்ரிஸ்டி நோயம் மூவரும், ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகளை செயல்படுத்தி, எல்லை பாதுகாப்பை பலப்படுத்தவும், அமெரிக்க – மெக்சிகோ எல்லையை கடக்கும் ஆவணமற்ற குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்தவும் உறுதியேற்றுள்ளனர்.

எல்லைப் பிரச்சினை

இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், எல்லைப் பிரச்னையில் மேற்கொள்ளப்படும் நாடு கடத்தல் நடவடிக்கைகள், பணியிட சோதனைகள் உள்ளிட்டவை ஜனநாயக கட்சி சார்புடைய மாகாணங்களிலும், நீதித்துறையுடன் கடும் மோதல் போக்கை உருவாக்க வாய்ப்புள்ளது. அதேபோல, குடியேற்ற தொழிலாளர்களை பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கும் சில குடியரசுக் கட்சி ஆதரவு மாகாணங்களிலும் எதிர்ப்பை சந்திக்கலாம்.

ட்ரம்பின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மற்ற இருவர் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர். இருவருமே மிகப்பெரிய தொழிலதிபர்கள். இருவருமே ட்ரம்ப்பின் பிரசாரத்துக்கு மில்லியன் கணக்கில் பணத்தை வாரி இறைத்ததாக கூறப்படுகிறது.

இருவரையும் அரசின் செயல்திறன் துறையின் பொறுப்பாளர்களாக ட்ரம்ப் நியமித்துள்ளார். இது அரசின் அதிகாரபூர்வ துறை இல்லையென்றாலும், அரசாங்கத்தால் ஓரளவு கட்டுப்படுத்தப்படும் செலவினங்களுக்கு இந்த ஆலோசனை வழங்கும் என்று தெரிகிறது. தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரித்த ட்ரம்ப், இந்த முறை செலவினங்களைக் குறைப்பதில் ஈடுபாடு காட்டுகிறார்.

விவேக் ராமசாமி

ஆனால் சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ காப்பீடு ஆகிய இரண்டிலும் செலவை குறைக்கப் போவதில்லை என்று உறுதியளித்துள்ளதால் இந்த துறையின் வேலையை இது கடினமாக்கும். அத்துடன் கென்னடியின் உணவு சேர்க்கைகள் மற்றும் அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகள் மீதான கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் அறிவிப்புடன் மஸ்க் மற்றும் விவேக்கின் செலவின குறைப்பு கொள்கைகள் பெரிதும் முரண்படக்கூடும்.

அடுத்தபடியாக மார்கோ ரூபியோ, மைக் வால்ட்ஸ், ஜான் ராட்க்ளிஃப் ஆகியோர் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ என்ற ட்ரம்ப்பின் கொள்கைக்கான பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய பிரதான இலக்கு சீனா.

சீன அரசாங்கத்தின் மீது தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் ரூபியோ, சீன அதிகாரிகள் மீதான பயணத் தடைகள் மற்றும் ஹாங்காங்கில் உள்ள அமெரிக்க வர்த்தக அலுவலகங்கள் மூடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருபவர்.

சீன இறக்குமதிகள் மீது அதிக வரி விதிக்கும் ட்ரம்ப்பின் வாக்குறுதியை இந்த மூவரும் வழிமொழிய வாய்ப்புள்ளது. இவர்கள் சீனாவை அமெரிக்காவுக்கு பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பார்க்கின்றனர்.

தனது முதல் ஆட்சிக் காலத்தில், ட்ரம்ப் சீனாவுடனான வர்த்தகப் போரை தீவிரப்படுத்தினார். ஆனால் கோவிட் தொற்றுக்கு மத்தியில் அதைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன. மேலும் அவர் கொரோனாவுக்கு ‘சீன வைரஸ்’ என்று பெயரிட்டதால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் மேலும் விரிசல் அதிகமானது. எனினும் அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அற்புதமான தலைவர் என்றும் பாராட்டினார்.

ரூபியோ

சீன விவகாரத்தில் ட்ரம்ப்பின் இந்த கணிக்கவியலாத தன்மை அமெரிக்காவின் மிக முக்கிய வெளியுறவுக் கொள்கையை நிர்வகிப்பதை இன்னும் கடினமாக்கும். உளவுத்துறை இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துளசியுடன் ரூபியோவுக்கு மோதல் ஏற்படலாம். காரணம் துளசி முன்னதாக கடந்த 2020ல் ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கையை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதன் அடிப்படையில் பார்த்தால் வெளியே ட்ரம்ப்பின் தளபதிகள் அனைவரும் அவர் மீதான விசுவாசத்தில் ஒன்றிணைந்திருந்தாலும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனித்தனி நோக்கங்கள், கொள்கைகள் வெவ்வேறாக, முரண்படக்கூடிய வகையில் இருப்பதால் ட்ரம்ப் தனது 2-வது ஆட்சிக் காலத்தை சவால்கள் ஏதுமின்றி நடத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.