தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் கதாநாயகியாக அசத்தி வருபவர் த்ரிஷா. கமல், சிரஞ்சீவி, மோகன்லால், அஜித், டொவினோ தாமஸ் என ஒவ்வொரு இன்டஸ்ட்ரியின் டாப் ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார் த்ரிஷ்.
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவையாக ஸ்கோர் செய்த, த்ரிஷா, மீண்டும் மணிரத்னத்துடன் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. கமல், சிம்பு, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், அபிராமி எனப் பெரிய நட்சத்திர கூட்டம் இந்தப் படத்தில் நடித்திருக்கிறது. த்ரிஷா இதில் கமலுக்கு ஜோடி இல்லை என்றும், சிம்புவின் ஜோடியாக நடித்து வருகிறார் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது. இதில் கமலின் போர்ஷன் முடிவடைந்துவிட்டாலும், இதர நடிகர்களின் போர்ஷன் இப்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. ஆனால், இதற்கு முன்னர் மும்பையில் எடுக்கப்பட்ட காட்சிகளிலேயே த்ரிஷாவின் போர்ஷன் எடுக்கப்பட்டு விட்டது என்பதால், அதனை முடித்த பின்னரே அஜித் படத்திற்குச் சென்றார் த்ரிஷா.
விடாமுயற்சி:
அஜித்துடன் ‘விடா முயற்சி’ படத்தில் கமிட் ஆனார் த்ரிஷா. அஜர்பைஜான் நாட்டில் அதன் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்திலும் இதன் படப்பிடிப்பு நடந்தது. இந்த சமயத்தில் தான் அஜித்தின் மற்றொரு படமான ‘குட் பேட் அக்லி’யின் படப்பிடிப்பையும் தொடங்கினார் அஜித். இரண்டு படங்களின் படப்பிடிப்பிலும் தொடர்ந்து ஒரு வாரம் நடித்துக் கொடுத்தார் அஜித். அப்போது த்ரிஷாவின் காம்பினேஷன்களையும் படமாக்கினார்கள். அதன்பிறகு ஸ்பெயினில் நடந்து வரும் படப்பிடிப்பிலும் த்ரிஷா பங்கேற்று வருகிறார். ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு நிறைவடைய ஒரு பாடல் காட்சி படமாக்க வேண்டியிருக்கிறது என்றும், அடுத்தாண்டில் அதன் படப்பிடிப்பு இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
‘விடா முயற்சி’யின் படப்பிடிப்பிற்கு இடையே தான் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வம்பரா’, மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் ‘ஐடென்டிட்டி’ ஆகிய படங்களில் கமிட் ஆகி நடித்து வந்தார். இதில் டொவினோவுடன் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளதால், பின்னணி இசை வேலைகள் தீவிரமடைந்துள்ளன.
சிரஞ்சீவியுடன் நடித்து வரும் ‘விஸ்வம்பரா’ ஃபேன்டஸி, ஆக்ஷன் படம். த்ரிஷாவுடன் ‘கோட்’ நாயகி மீனாட்சி சௌத்ரி, ‘சர்தார் 2’ ஆஷிமா ரங்கநாத்தும் நடிக்கிறார். இதிலும் த்ரிஷாவின் போர்ஷன் முழுவதும் படமாக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். வரும் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரும் என அறிவித்துள்ளதால் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரக்கின்றன.
இது தவிர, மோகன்லாலுடன் ‘ராம்’ என்ற படமும் கைவசம் வைத்துள்ளார். கடந்த 2020 லாக்டவுனுக்கு முன்னரே இதன் படப்பிடிப்பு ஆரம்பமானது. பல்வேறு காலகட்டங்களை பிரதிபலிக்கும் இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இன்னும் சில ஷெட்யூல்கள் இதன் படப்பிடிப்பு மீதமிருக்கின்றன என்றும் தகவல்.