புதுடெல்லி: மணிப்பூரில் சமீபத்தில் நிகழ்ந்த வன்முறை, உயிர் இழப்புகள், பொது அமைதிக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த முக்கிய வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஏற்றுக்கொண்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவை உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் (நவ. 16) பிறப்பித்த நிலையில், தற்போது இவ்வழக்குகள் மணிப்பூர் காவல்துறையிடம் இருந்து என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் முகாமில் தங்கி இருந்த மைதேயி சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். குகி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுவினர் இந்த வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கொலைகள் குறித்தும், வன்முறையைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள், அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்தும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொள்ளும்.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முயற்சிகளை மேற்கொண்டு வரும் மத்திய உள்துறை அமைச்சகம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனைத்து பாதுகாப்புப் படையினருக்கும் அறிவுறுத்தியுள்ளது. வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அதேநேரத்தில், மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, வதந்திகளை நம்பாமல், பாதுகாப்புப் படையினருடன் ஒத்துழைக்குமாறும், அமைதியைப் பேணுமாறும் பொதுமக்களை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
வன்முறையைக் கட்டுப்படுத்த கூடுதலாக 2,000 மத்திய ஆயுதக் காவல் படையினர் (CAPF) மணிப்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் மேலும் படைகளை அனுப்பவும் உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூரின் பாதுகாப்பு நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, மணிப்பூர் அரசியல் நிலவரம் தொடர்பான ஆலோசனையில் அமித் ஷா இன்று ஈடுபடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஆட்சியிலிருந்து விலகிய என்பிபி – மணிப்பூரில் பாஜக கூட்டணி அரசில் இருந்து தேசிய மக்கள் கட்சி (என்பிபி) நேற்று விலகியது. மணிப்பூர் சட்டப்பேரவையில் மொத்தம் 60 எம்எல்ஏக்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இதில் தேசிய மக்கள் கட்சியும் (என்பிபி) இடம் பெற்றிருந்தது. மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த பாஜக தவறிவிட்டதாக குற்றம் சாட்டி என்பிபி கட்சி பாஜக கூட்டணி அரசில் இருந்து விலகியது. என்பிபி கட்சியில் 7 எம்எல்ஏக்கள் உள்ளனர். மணிப்பூர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 31 எம்எல்ஏக்கள் தேவை. பாஜகவுக்கு 32 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் பாஜக அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.