வாரத்துக்கு 2 நாள்கள் உடற்பயிற்சி… மூளைப் பாதுகாப்பு..! ஆய்வு முடிவு சொல்வதென்ன..?

எல்லோருமே ஜிம்முக்கு சென்று மாங்கு மாங்கென்று உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறோம்.

ஆனால், அனைவருக்கும் இது சாத்தியம் இல்லை. அதனாலேயே கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களை ‘ஆஹோ ஓஹோ’ என்று கொண்டாடுகிறோம். அதே நேரம், ‘நம்மால அவங்களை மாதிரி எக்சர்சைஸ் செய்ய முடியலையே, அதனால நம்மோட ஹெல்த் நல்லா இருக்காதோ’ என்கிற பயமும் பலருக்கு இருக்கும். அந்த பயத்தை அடித்து நொறுக்கியிருக்கிறது சில நாள்களுக்கு முன்னால் வந்த ஆய்வு ஒன்று.

உடற்பயிற்சி

ஆரோக்கியமாக வாழ மிதமான உடற்பயிற்சிகளும், நம்முடைய அசைவுகளும் மட்டுமே போதுமானது என்கிறது அந்த ஆய்வு. அதுவும் வாரத்துக்கு 2 நாள்கள் மட்டும் உடற்பயிற்சி செய்தால்கூட, மூளையில் ஏற்படக்கூடிய நோய்களை வர விடாமல் தடுக்க முடியும் என்றிருக்கிறது அந்த ஆய்வு.

கனடா மற்றும் அமெரிக்க ஆராய்ச்சிக்குழுவினரால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பரிசோதனைக்காக, 18 முதல் 97 வயதுக்குட்பட்ட 10 ஆயிரம் பேர் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்களுடைய வாராந்திர உடற்பயிற்சிகளின் அளவு மற்றும் அவர்களுடைய மூளையின் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இரண்டையும் அடிப்படையாக வைத்து, அவர்களுடைய மூளையின் அளவு மற்றும் அடர்த்தியில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து வந்திருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்வதனால் மூளையில் சுரக்கும் நியூரோட்ரோபிக் எனப்படும் புரதம், மூளையில் வீக்கத்தைக் குறைக்கிறது; மூளை செல்களிடையே நரம்பு தூண்டுதல்களை கடத்துகிற இணைப்புகளை வலுப்படுத்துகிறது; நியூரானின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இவை மூன்றும் சேர்ந்து நம்முடைய நினைவாற்றலையும் அறிவாற்றலையும் மேம்படுத்துகிறது. தவிர, அல்சைமர் போன்ற நோய்கள் வராமலும் தடுக்கிறது இந்த மிதமான உடற்பயிற்சி மற்றும் உடல் அசைவுகள் என்கிறது அந்த ஆய்வு.

alzheimer

ஸோ, மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் வாரத்துக்கு 2 நாள்களாவது மிதமான உடற்பயிற்சிகளை செய்யுங்கள். செல்போனில் மூழ்கிக்கொண்டு ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டிருக்காமல் உடல் அசைவுகளை அதிகப்படுத்துங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.