புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு குறைவதற்காக GRAP-4-இன் கீழ் எடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகளை முன் அனுமதியின்றி குறைக்கக் கூடாது என்று மாநில அரசிடம் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது குறித்த வழக்கு நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இன்று (திங்கள்கிழமை) முதல் GRAPஇன் 4-ம் கட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் தேசிய தலைநகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். அப்போது, “காற்றின் தரக் குறியீடு (AQI) 300 மற்றும் 400-க்கு இடையில் உள்ளபோது நிலை 4 செயல்படுத்தப்பட வேண்டும். GRAP-இன் நிலை 4-ஐ பயன்படுத்துவதைத் தாமதப்படுத்துவதன் மூலம் இந்த விஷயங்களில் நீங்கள் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்?” என்று நீதிபதிகள் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
மேலும், “மாசு அளவு அபாயகரமாக அதிகரித்து வருவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது. AQI 450-க்குக் கீழே சென்றாலும், 4-ஆம் கட்டத்தின் கீழ் தடுப்பு நடவடிக்கைகளைக் குறைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நீதிமன்ற அனுமதி இல்லாமல் GRAP-4 தடைகளை தளர்த்த வேண்டாம்” என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதனிடையே, டெல்லி மாநகராட்சி மற்றும் அரசு அலுவலகங்களின் நேரத்தை மாற்றி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆளுநரின் உத்தரவில், “டெல்லி மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8.30 மணி முதல் 5 மணி வரையும், டெல்லி அரசு அலுவலகங்கள் காலை 10 மணி முதல் 6.30 மணி வரையும் இயங்கும். அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி வரை இது அமலில் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இந்தக் கட்டுப்பாடுகள் கடந்த 16-ம் தேதி காலை 8 மணி முதல் அமலுக்கு வந்தன. அதன்படி, டெல்லியில் புதிய கட்டிடங்களை கட்டுவதற்கும், பழைய கட்டிடங்களை இடிப்பறத்கும் தடை விதிக்கப்பட்டது. அதேநேரத்தில், மிக முக்கிய அரசு கட்டுமானப் பணிகளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோலில் இயங்கும் BS-III (Bharat Stage-III) 4 சக்கர வாகனங்கள், டீசலில் இயங்கும் BS-IV 4 சக்கர வாகனங்களை தேசிய தலைநகர் பிராந்தியம் (National Capital Region-NCR) மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் இயக்க தடை விதிக்கப்பட்டது.
வெளியில் இருந்து வரும் BS-III வகை 4 சக்கர வாகனங்களில் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வாகனங்களைத் தவிர பிற வாகனங்களை டெல்லிக்கு உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்றும் காற்றத் தர மேலாண்மை ஆணையம் டெல்லி அரசுக்கு அறிவுறுத்தியது.
டெல்லியில் மட்டுமல்லாது, அதை ஒட்டிய என்சிஆர் மாவட்டங்களான குருகிராம், ஃபரிதாபாத், காஜியாபாத் மற்றும் கௌதம் புத் நகர் ஆகிய இடங்களிலும் மாசுபடுத்தும் இத்தகைய நான்கு சக்கர வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டது. எலக்ட்ரிக், சிஎன்ஜி மற்றும் டீசலில் இயங்கும் பிஎஸ்-6 வகை வாகனங்கள் தவிர அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
மேலும், ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கான பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளை நிறுத்துவது மற்றும் ஆன்லைன் கற்பித்தல் முறைக்கு மாறுவது குறித்து டெல்லி மற்றும் பிற மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்றும் காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.