அண்ணாமலை உடன் விஜய் சந்திப்பா? – பாஜக, தவெக மறுப்பு

சென்னை: லண்டனில் அண்ணாமலையை விஜய் சந்தித்ததாக வரும் தகவல் பொய்யானது என்று பாஜக, தவெக ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநில மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்குவதாக அறிவித்துள்ள விஜய், 2026-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரசியல் மேற்படிப்பு படிக்க லண்டன் சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை, லண்டன் சென்று விஜய் ரகசியமாக சந்தித்ததாகவும், இதனை தொடர்ந்து திமுகவை தவிர வேறு எந்த கட்சியையும் விமர்சிக்கக் கூடாது. குறிப்பாக, விஜயை விமர்சனம் செய்யவே கூடாது என்று பாஜகவினருக்கு அண்ணாமலை உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து, தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறுகையில், “லண்டனில் அண்ணாமலை – விஜய் சந்திப்பு என்பது பொய்யான தகவல். அதுமாதிரி எந்த சந்திப்பும் நடைபெறவில்லை. அண்ணாமலை படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். அவர் யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளிடம் கேட்டபோது, “கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்து கட்சியின் தலைவர் விஜய் தெளிவாக விளக்கி உள்ளார். எங்களுடைய தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இருக்கும். தனது கடைசி திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய், அண்ணாமலையை சந்தித்ததாக வெளியாகும் தகவல் தவறானது. கூட்டணி குறித்து விஜய் முடிவு செய்வார்” என்றனர்.

அதிமுகவுடன் கூட்டணி இல்லை: இதனிடையே, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கட்சி தலைவர் விஜய் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். அவரின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

இச்சூழலில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கான முதன்மை சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புபடுத்தி வரும் உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்கள் முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தை தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளை தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகைய பொய்யான செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்க தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றி கொள்கை திருவிழாவில் கட்சி தலைவர் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழக மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள். எனவே, மக்களை குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கூட்டணி முடிவு எடுக்கவில்லை: அதிமுக – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி தொடர்பாக அதிமுக எந்த முடிவும் எடுக்கவில்லை. அதிமுக- தமிழக வெற்றிக் கழகம் இடையே கூட்டணி என வரும் தகவல் தவறானது. விஜய் கட்சியுடன் கூட்டணி என அதிமுக எப்போது அறிவித்தது. கூட்டணியை இறுதி செய்ய இன்னும் காலம் இருக்கிறது. கூட்டணி தொடர்பான முடிவை பொதுச்செயலாளர் அறிவிப்பார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.