கவுதம் கம்பீர் குறித்து முக்கிய கருத்தை வெளியிட்ட சவுரவ் கங்குலி!

2024 டி20 உலக கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு அணியில் பல மாற்றங்கள் நடந்தது. டி20 அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு பதில், சூர்யாகுமார் யாதவை கேப்டனாக மாற்றினார். இருப்பினும் இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் தொடரிலேயே அணியை தோல்விக்கு அழைத்து சென்றார். அதன் பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3-0 என்ற தோல்வி அவருக்கு தற்போது அழுத்தங்களை கொடுத்து வருகிறது. நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான தோல்வியால் அவரது பயிற்சியாளர் பதவி மீது விமர்சனங்கள் வர தொடங்கி உள்ளது. பலரும் அவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கம்பீரின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை பொறுத்து அவரின் எதிர்காலத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும், தொடர் முடியும் வரை ரசிகர்கள் பொறுமையாக இருக்குமாறும் கங்குலி வலியுறுத்தி உள்ளார். கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று சிறிது நாட்களே ஆகும் நிலையில் அவரின் செயல்பாடுகளை மதிப்பிடுவது நல்லது இல்லை என்றும் கங்குலி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் நவம்பர் 22ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான தீவிர பயிற்சியில் இந்திய அணி இருந்து வருகிறது. 

சவுரவ் கங்குலி ஆதரவு

“கம்பீர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்கட்டும் என்று தான் நான் கூறுவேன். ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கம்பீர் பேசியது விமர்சனங்களுக்கு உள்ளானது. அதனை நானும் பார்த்தேன். அது எப்போதுமே அப்படித்தான் பேசுவார். இலங்கை எதிராக ஒருநாள் தொடர் தோல்வி மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் இழந்ததால் அவர் அப்படி பேசி இருக்கலாம். ஆனால் கம்பீருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்” என்று கங்குலி கூறினார். சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற 3 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது. மேலும் இலங்கைக்கு எதிராக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரை இழந்தது. 

செய்தியாளர் சந்திப்பில் கவுதம் கம்பீர்!

சமீபத்தியில் செய்தியாளர் சந்திப்பில் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்கை பற்றிய கம்பீரின் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாண்டிங் முன்னதாக விராட் கோலியின் டெஸ்ட் ஃபார்ம் குறித்து கவலை தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த கம்பீர், கோலி மீது கவனம் செலுத்துவதற்கு பதிலாக பாண்டிங்கை தனது சொந்த அணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார். இதற்கு பதிலளித்த பாண்டிங், கம்பீரை முட்கள் நிறைந்த பாத்திரம் என்று கூறினார். 

கம்பீர் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்படுவார் – கங்குலி

“நீங்கள் அங்கு சாதாரணமாக விளையாட முடியாது, விளையாட்டை கடினமாக விளையாட வேண்டும். அதுதான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது பார்டர் கவாஸ்கர் தொடர் அதிகம் போட்டித்தன்மையுடையதாக மாறியுள்ளது. ஆஸ்திரேலியா எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது. பல ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்” என்று கங்குலி தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற, இந்த தொடரில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.