இயக்குநர் சத்யஜித் ரேவின் முதல் குழந்தை நட்சத்திரமான உமா தஷ்குப்தா இயற்கை எய்தியிருக்கிறார்.
வங்க மொழி இயக்குநரான சத்யஜித் ரேவின் முதல் திரைப்படமான `பதர் பாஞ்சாலி’ 1955-ல் வெளியானது. இன்றும் கொண்டாடப்படும் இத்திரைப்படம் மாற்று சினிமாவுக்கான முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறது. சினிமா மீது ஆர்வம் கொண்ட பலருக்கும் முதலில் பரிந்துரைப்பது இத்திரைப்படமாகதான் இருக்கும். அந்தளவிற்கு சினிமாவில் நீக்கமற இடத்தை பிடித்திருக்கிறது இத்திரைப்படம்.
ஏழ்மையின் நிதர்சனப் பக்கத்தை யதார்த்தமான நடிப்பின் மூலம் சொல்லியிருப்பார் இயக்குநர் சத்யஜித் ரே. பணியிழப்பது அதன் பிறகு வெளி ஊர்களுக்குச் சென்று வேலை தேடுவது என கணவர் ஒரு புறமென்றால் மறுபுறம் பொறுப்புள்ள குடும்ப பெண்ணாக முதிர்ச்சியற்ற குழந்தைகளை கவனித்துக் கொண்டு அவமானங்களால் தினந்தோறும் சிக்கி தவித்துக் கொண்டிருப்பார் மனைவி. இவர்களை தாண்டி, குடும்பத்திலிருக்கும் எந்த பிரச்னையையும் அறியாத முதிர்ச்சியற்ற குழந்தைகளாக வரும் துர்கா மற்றும் அப்பு கதாபாத்திரங்களில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். ரயிலை கண்டு ரசிப்பது, மற்றவர்களின் பொருளை எடுத்து வைத்துக் கொள்வது என இவர்கள் இருவரின் காட்சிகளெல்லாம் நம்முள் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இத்திரைப்படத்தில் துர்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை உமா தஷ்குப்தா தற்போது காலமாகியிருக்கிறார். 84 வயதான உமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடும் அவதியை சந்தித்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் கொல்கத்தாவில் இயற்கை எய்தியிருக்கிறார். `பதர் பாஞ்சாலி’ திரைப்படமே இவருக்கு முதல் மற்றும் கடைசி திரைப்படம். அதன் பிறகு உமா வேறு எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால் இன்றும் உலக சினிமாவின் முக்கியமான பக்கங்களில் இவருடைய கதாபாத்திரமும் ஒன்றாக இருக்கிறது. அப்படியான ஒரு கதாபாத்திரத்தை அவர் நம்மிடையே கொடுத்திருக்கிறார்.
ஒரு பள்ளி நாடகத்தில் உமா தஷ்குப்தா நடித்துக் கொண்டிருக்கும்போது இவரை அடையாளம் கண்டு படத்தில் நடிக்க வைத்தார் சத்யஜித் ரே. இந்த கதைக்கு யதார்த்தமான நடிப்பை கொடுக்க நடிகர்களின் தேர்வு மிகவும் முக்கியமானது என்பதை எண்ணி உமாவின் பெற்றோரிடம் ஒப்புதல் பெற்று படத்தில் நடிக்க வைத்தார் இயக்குநர்.
உமா தஷ்குப்தாவின் மறைவு குறித்து இயக்குநர் சத்யஜித் ரேவின் மகனான சந்தீப் ரே, “ சினிமா காதலர்களால் பல தலைமுறைகளுக்கு போற்றப்படுவார் உமா. பதர் பாஞ்சாலி படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது நான் சிறுவனாக இருந்தேன். நான் வளர்ந்துப் பிறகு என்னுடைய தந்தை உமாவின் ஆற்றல் மிகுந்த நடிப்பு குறித்து என்னிடம் எடுத்துரைத்திருக்கிறார். அவர் ஒவ்வொரு காட்சியையும் அழகாக உள்வாங்கி அசலாக நடித்துவிடுவார். இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். அவருடைய சொந்த காரணங்களுக்காக அவர் சினிமாவிலிருந்து அப்போது விலகிவிட்டார்.” எனக் கூறியிருக்கிறார்.
அத்திரைப்படத்திலும் துர்கா உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவார். இதில் துர்காவுக்கு சகோதரராக நடித்திருந்த அப்பு கதாபாத்திரத்தை வைத்து அடுத்தடுத்து `அபாரஜிதோ’, `தி வோல்ர்ட் ஆஃப் அப்பு’ என இரண்டு படங்களை எடுத்திருந்தார் சத்யஜித் ரே.
மேலும், இப்படத்தில் இவருடைய சகோதரராக நடித்திருக்கும் சுபீர் பேனர்ஜி, “ என்னுடைய சகோதரியை நான் இன்று உண்மையாகவே இழந்துவிட்டேன். படத்தில் அவர் மரணிப்பதற்கு காரணமாக இருக்கும் மழைக் காட்சியின்போது மூன்று மணிநேரம் நாங்கள் மரத்திற்கு கீழே இருந்தோம். அப்போது நான் சிறுவன் என்பதற்காக அத்தனை கவனமாக உமா என்னை பார்த்துக் கொண்டார். இந்தப் படத்திற்குப் பிறகு நானும் உமாவும் வேறு எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை.ஆனால், பல வாய்ப்புகளும் அப்போது கிடைத்தது. நடுத்தர பெங்காலி குடும்பங்களுக்கு சினிமா சரியான இடமாக தெரியவில்லை. உமாவின் தந்தையும் சினிமா விஷயத்தில் மிகவும் ஸ்ட்ரிட்டாக இருந்துவிட்டார்.” என தெரிவித்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…