புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி இருந்த மலையாள நடிகர் சித்திக்குக்கு முன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், விசாரணை நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கை மலையாள சினிமா உலகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு பல நடிகைகள் துணிச்சலாக தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசினார்கள். காவல் துறையிலும் புகார் அளித்தனர்.
இதையொட்டி, 2016 ஆம் ஆண்டு பிரபல சீனியர் நடிகர் சித்திக் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி துணை நடிகை ஒருவர், காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் பூதாகரமாக வெடித்த நிலையில், நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்து சித்திக் ராஜினாமா செய்தார். செப்டம்பர் 24 அன்று, இது தொடர்பான வழக்கில் சித்திக்கின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்தது, இதையடுத்து அவர் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
இந்த விசாரணையில் சித்திக் தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லை என்று கேரள காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் பேலா எம் திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அதில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் 8 ஆண்டுகளாக புகார் அளிக்காமல் இருந்ததை சுட்டிக்காட்டியும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. சித்திக்குக்கு இடைக்கால நிவாரணமாக முன் ஜாமீன் வழங்கியுள்ள நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது.